மத்திய அரசின் பெரியண்ணன் மனப்போக்கு: நரேந்திர மோடி குற்றச்சாட்டு

மத்திய அரசின் பெரியண்ணன் மனப்போக்கு: நரேந்திர மோடி குற்றச்சாட்டு

Published on

மத்திய அரசு பெரியண்ணன் மனப்போக்குடன் செயல்படுகிறது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வேறுபடுத்தி பார்க்கிறது என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா, பாலாகட் பகுதிகளில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டங்களில் அவர் பேசியதாவது:

மாநில அரசுகளிடம் மத்திய அரசு பெரியண்ணன் மனப்போக்குடன் நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு வேறுபடுத்திப் பார்க்கிறது. அந்த வகையில் மத்திய அரசின் ஆணவப் போக்கால் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அனுபவித்து வரும் வேதனைகளை என்னால் உணர முடிகிறது.

பொதுமக்களிடம் காங்கிரஸ் முதலில் கைகுலுக்கி வாக்கு கேட் கும். அதன் பின்னர் கையை உயர்த்தி மிரட்டும். அதன்பின் தனது மாயாஜால கைகளால் மக்களை ஏமாற்றும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுகளிடம் எந்த பாகுபாடும் காட்டப்படாது. நாம் அனைவரும் சமமானவர்கள். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து மாநில முதல்வர்களுடனும் மத்திய அரசு இணைந்து பணியாற்றும்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு அரசுகள் வந்து போயுள்ளன. ஆனால் இவ்வளவு ஊழல்கள் நடந்த ஆட்சியை மக்கள் இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறார்கள்.

விலைவாசி உயர்வு குறித்து எந்த காங்கிரஸ் தலைவர்களும் பேச மறுக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் விலைவாசியைக் குறைப்போம் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நம்பி 2009 தேர்தலில் மக்கள் வாக்களித் தார்கள். ஆனால் கொடுத்த வாக்கை காங்கிரஸ் காப்பாற்றவில்லை. இனிவரும் காலத்தில் காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான தருணம்.

பழங்குடியின மக்களுக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பழங் குடியின மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு

கடந்த 10 ஆண்டுகால ஆட்சி யில் காங்கிரஸ் அனைத்துத் துறை களிலும் தோல்வி அடைந்துவிட்டது. விவசாயிகள், ஏழைகளின் துயரை மத்திய அரசு துடைக்கவில்லை. மாவோயிஸ்ட், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரி ழந்தவர்களைவிட வறட்சியால் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம்.

உணவு தானியக் கிடங்குகளில் உபரியாக இருக்கும் தானியங்களை ஏழைகளுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்தாத மத்திய அரசு தானியங்கள் கெட்டுப் போன பிறகு அவற்றை மலிவு விலையில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்தது.

பாகிஸ்தான் மீது மென்மையான போக்கு

இந்திய வீரர்களின் தலையைத் துண்டித்து பாகிஸ்தான் ராணுவம் படுகொலை செய்தது. ஆனால் பாகிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அந்த நாட்டு பிரதமருக்கு மத்திய அரசு விருந்து உபசாரம் செய்கிறது என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in