Last Updated : 07 Sep, 2020 03:06 PM

 

Published : 07 Sep 2020 03:06 PM
Last Updated : 07 Sep 2020 03:06 PM

'இந்தியாவின் பொருளாதாரம் 23.9 சதவீதமாக வீழ்ந்தது  எச்சரிக்கை மணி; அர்த்தமுள்ள நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்': ரகுராம் ராஜன் எச்சரிக்கை

ரிசர்வ்வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் : கோப்புப்படம்

புதுடெல்லி


இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது நமக்கு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, மனத்திருப்தி அடைந்திருக்கும் நிலையிலிருந்து அரசு வெளியேறி, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் வைத்து, அடுத்த கட்ட பொருளாதார மீட்சி நடவடிக்கைளை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், லிங்ட்இன் பக்கத்தில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி குறித்து எழுதியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது அனைவருக்கும் மிகப்பெரிய எச்சரிக்கைமணியாக இருக்க வேண்டும். ஏனென்றால், உலகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்த வீழ்ச்சியைவிட இந்தியப் பொருளாதாரத்தில் அமைப்புசாரா துறையின் வீழ்ச்சி அதிகமாக இருக்கிறது.

நாட்டை நிர்வாகம் செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சுயதிருப்தி மனநிலையிலிருந்து வெளியேறி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இப்போதுள்ள சூழலுக்கு அதிகமான சிந்தனையுள்ள, சுறுசுறுப்பாக செயலில் ஈடுபடும் அரசு நமக்குத் தேவை. ஆனால் ,தொடக்கத்தில் வேகமாகச் செயல்பட்டு தற்போது முடங்கிவிட்டதுபோல் தெரிகிறது.

கரோனா வைரஸால் இத்தாலியில் கூட பொருளதாாரம் 12.4 சதவீதம்தான் வீழ்ந்தது, அமெரி்க்காவில் 9.5 சதவீதம் தான் சரிந்தது. இந்த இருநாடுகள்தான் அதிகமான பொருளதாரா சரிவைச் சந்தித்துள்ளன.

கரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும்வரை பொருளாதார சிக்கல் காரணமாக, மக்கள் விருப்பப்படி செலவு செய்யும் அளவு குறையும். ஆதலால், அரசு சார்பில் அளிக்கும் நிவாரண உதவிதான் மிகவும் முக்கியமானது.

எதிர்காலத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக வளங்களை செலவு செய்யாமல் அரசு தயக்கம் காட்டினால், அது தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் உத்தியாகவே பார்க்கப்படும்.

நிவாரண உதவிகள், நிவாரணப் பணிகள் இன்றி, நாட்டின் பொருளாதாரம் மேலே வராது. நிவாரண உதவிகள் இல்லாவிட்டால், பொருளாதாரம் இன்னும் மோசமான சேதத்தை எதிர்நோக்கும்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் இன்னும் இருக்கிறது. ஆதலால், மக்கள் தங்கள் விருப்பப்படி செலவு செய்வது, அதாவது, ரெஸ்டாரண்ட் சென்று செலவழிப்பது உள்ளிட்ட பல அம்சங்களுக்குக் குறைவாகவே இருக்கும்.

அதேபோல, ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பல்வேறு தொடர்பான வேலைவாப்பும் மக்கள் வருகைக் குறைவால் கரோனா கட்டுக்குள் வரும்வரை குறைவாகவே இருக்கும். இதுபோல் ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கும்.

ஆதலால், அரசால் வழங்கப்படும் நிவாரணப் பணிகள்தான் அனைத்திலும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய இலவச உணவு தானியங்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டம் போன்றவை மிக்ககுறைவானது.

பொருளாதாரத்தைப் பற்றி அமைதியாக சிந்தித்தால், கரோனா வைரஸுக்கு எதிராக நோயில் படுத்து போராடி வரும் நோயாளிக்கு நிவாரணம்தான் நோயை எதிர்த்துப் போராட தேவையான உணவாகும்.

எந்தவிதமான நிவாரணப் பணிகளும் உதவிகளும் அளிக்காவிட்டால், மக்கள் வீடுகளில் தாங்கள் உண்ணும் உணவைக் குறைப்பார்கள், அல்லது ஒருவேளை உணவைக் கைடுவிடுவார்கள்.

வறுமையால், தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிப் படிப்பிலிருந்து நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்புவார்கள், அல்லது பிச்சை எடுக்க அனுப்புவார்கள். தாங்கள் சேமித்து வைத்திருந்த நகைகளை அடமானம் வைத்து கடன் பெற நேரிடும், அந்த கடனை இஎம்ஐ மற்றும் வாடகைக்கும் செலுத்த வேண்டியது இருக்கும்.

எந்தவிதமான நிவாரணமும் இன்றி, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சிறு ரெஸ்டாரண்ட் பணியிலிருந்தும் வேலையாட்களை நிறுத்துவார்கள், அவர்களுக்கு ஊதியம் தர முடியாது. அந்த நிறுவனங்களும் கடனில் தள்ளப்பட்டு,இறுதியாக நிரந்தரமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்.

நோயாளி நோய்வாய்பட்டு இருக்கும்போது, தொற்று கட்டுக்குள் வரும்வரை அவரால் சுறுசுறுப்பாக செயல்படாமல் முடங்கியே இருப்பார். ஆதலால், பொருளாதாரத்தை தூண்டிவிடும் நிவாரணங்களே அவர்களுக்குரிய டானிக் போன்றதாகும்.

நோய் நீங்கும்போது, நீங்கள் அளித்த நிவாரணப்பணிகளால் நோயாளிகளை விரைவாக மீண்டு எழச் செய்ய உதவியாக இருக்கும். ஆனால், நோயாளிக்கு எந்தவிதமான நிவாரணமும் அளிக்காமல் இருந்தால், நோய் நீங்கும்போது, அந்த நிவாரணம் மெதுவாகவே பணியாற்றும்.

இந்தியாவில் ஆட்டமொபைல் விற்பனை சூடுபிடித்துவிட்டது, இதனால் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு நாடு திரும்பிவிடும் என்பதை ஏற்க முடியாது. ஆட்டமொபைல் விற்பனையை வைத்து மட்டும் இதை கருத்தில் கொள்ள முடியாது.

இது சந்தையில் உள்ள உண்மையான நுகர்வோர்களின் தேவையை வெளிப்படுத்தவில்லை. உண்மையான தேவை என்பது மோசமாக சேதமடைந்துள்ளது, பொருளாதாரத்தில் பாதியளவுதான் செயல்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் கரோனாவுக்கு முந்தையக் காலத்திலிருந்தே பொருளாதார வளர்ச்சி குறைந்து இருந்தது, அரசின் நிதிநிலையும் சிக்கலாகவே இருந்தது. இதனால், நிவாரணப்பணிக்கும், பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்கு அதிகாரிகள் அதிகமாகச் செலவழிக்கத் தேவையில்லை என நம்பினர்.

இந்த மனநிலை அவநம்பிக்கையானது. அனைத்து வழிகளிலும் அரசு தனது வளங்களை விரிவுவடுத்தி,புத்திசாலித்தனமாக முடிந்தவரை செலவழித்திருக்க வேண்டும்.
வழக்கமான செலவுகளைவிட கூடுதலாக செலவிடாமல் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை. இவை அனைத்துக்கும் மிகவும் சிந்தனையுள்ள, சுறுசுறுப்பான செயல்பாட்டில் உள்ள அரசு தேவை. .

நாட்டின் இளைஞர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமல்லாமல், நட்புமிக்க அண்டை நாடுகளைத் தக்க வைத்துக் கொள்ளவும் இந்தியாவுக்குத் வலிமையான பொருளாதர வளர்ச்சி தேவை.

தற்காலிகமான அரைவேக்காடு சீர்திருத்தங்களான, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை ரத்து செய்தது போன்றவை சிறிய அளவுக்குத்தான் தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தைத் தரும். மோசமான செயலுக்கு சீர்திருத்தம் என பெயரிடப்பட்டது. சீர்திருத்தங்கள் என்பது பொருளாதார செயல்பாட்டை, வளர்ச்சியை தூண்டிவிட வேண்டும், உடனடியாக இல்லாவிட்டாலும்கூட, குறிப்பிட்ட காலத்துக்குப்பின், முதலீட்டாளர்களை தூண்டிவிட வேண்டும்.

கரோனாவிலிருந்து உலகம் இந்தியாவுக்கு முன்பே சீரடைந்துவிடும். ஆதலால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த ஏற்றுமதியை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x