Last Updated : 07 Sep, 2020 01:35 PM

 

Published : 07 Sep 2020 01:35 PM
Last Updated : 07 Sep 2020 01:35 PM

நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு: இமாச்சலப்பிரதேச அரசும் தனியாக பாதுகாப்பு அளிக்கிறது

நடிகை கங்கனா ரனாவத் : படம் உதவி ட்வி்ட்டர்

புதுடெல்லி


பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதையடுத்து, அவருக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி அவரின் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில் கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தவிர சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடந்த இரு நாட்களா ட்விட்டரில் கடுமையாக வாக்குவாதம் நடந்து வருகிறது.

மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கனா மன்னிப்புக் கோர வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

இந்த சூழலில்தான் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும், கங்கனா ரனாவத் இமாச்சலப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கங்கனா ரனாவத்துக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி இமாச்சலப்பிரதேச அரசு சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, இந்த பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த 10 முதல் 11 துப்பாக்கி ஏந்திய வீரர்கள் 24 24 மணிநேரமும், கங்கனா ரனாவத்துக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர இமாச்சலப்பிரதேச அரசும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு தனியாக பாதுகாப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளது. கங்கனா ரனாவத் மும்பை செல்லும் போது அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ நடிகை கங்கனா ரனவாத் இந்த மாநிலத்தின் மகள், சமூகத்தில் புகழ்பெற்றவர். அவருக்கு ஆபத்து, அச்சுறுத்தல் வரும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை.

கங்கனா ரனாவத்தின் தந்தையும், சகோதரியும் என்னிடம் வந்து கங்கனாவுக்கு பாதுகாப்பு அளி்க்கக் கோரி என்னுடன் தொலைப்பேசியில் பேசினார்கள்.

அதன்படி, கங்கனாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாநில காவல்துறை டிஜிபியை கேட்டுக் கொண்டிருக்கிறேன். கங்கனா வரும் 9-ம் தேதி மும்பை செல்லும் போது அவருக்கு இமாச்சலப்பிரதேச அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தால்அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்டுகிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பதில் அளி்க்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x