ஹிஸ்புல் தலைவர் சலாவுதீன் பாக். உளவு அமைப்பின் ஊழியர்: புதிய ஆதாரங்கள் கிடைத்தன

ஹிஸ்புல் தலைவர் சலாவுதீன் பாக். உளவு அமைப்பின் ஊழியர்: புதிய ஆதாரங்கள் கிடைத்தன
Updated on
1 min read

காஷ்மீரின் பத்காம் பகுதியை சேர்ந்த சையது சலாவுதீன் (74), காஷ்மீர் காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றினார். பின்னர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் இணைந்த அவர், தற்போது அந்த அமைப்பின் தலைவராக உள்ளார். மேலும் ஐக்கிய ஜிகாத் கவுன்சிலின் தலைவராகவும் செயல்படுகிறார்.

காஷ்மீர் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் சையது சலாவுதீனுக்கு தொடர்பு உள்ளது. அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்திருக்கும் அவரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யின் ரகசிய ஆவணம் ஒன்று கசிந்துள்ளது. அதில், "சையது சலாவுதீன் காரை தேவையின்றி தடுத்து நிறுத்தக் கூடாது" என கூறப்பட்டுள்ளது. இதை, பாகிஸ்தானின் அனைத்து பாதுகாப்புப் படை பிரிவுகளுக்கும் ஐஎஸ்ஐ அனுப்பி உள்ளது.

கடந்த 1989-ம் ஆண்டில் நிதி நடவடிக்கை செயல் குழு (எப்ஏடிஎப்) உருவாக்கப்பட்டது. தீவிரவாத அமைப்புகளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது. அதை தடுக்க தவறும் நாடுகள் குறித்து எப்ஏடிஎப் அமைப்பு ஆய்வு செய்து சாம்பல், கருப்பு பட்டியலை வெளியிடுகிறது.

இந்நிலையில் அடுத்த எப்ஏடிஎப் கூட்டம் வரும் 14 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது சலாவுதீன் விவகாரம் எழுப்பப்பட உள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in