

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா வைரஸால் 61,527 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,808 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், அதிகாரிகளுடன் முதல்வர் அமரீந்தர் சிங் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன்பின், பஞ்சாப் அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏழை குடும்பத்தினர் கரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள தயங்குகின்றனர். ஏனெனில், குறைந்த வருவாய் பெறும் நிலையில், பரிசோதனைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அந்த பயத்தைப் போக்கி, தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்வதை ஊக்குவிக்க, ஏழை குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவச உணவு பாக்கெட் விநியோகிக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம், கரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு பாக்கெட் விநியோகம், கரோனா வைரஸ் அதிகம் பாதித்துள்ள பாட்டியாலா மாவட்டத்தில் முதலில் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தை மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.