

ஜேஇஇ மெயின் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், வரும் 13-ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தீவிரமாகத் தயாராகி வருகிறது.
இந்த முறை நீட் தேர்வில் ஏறக்குறைய 16 லட்சம் மாணவர்கள் அதாவது 15.97 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் காலத்தில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தக்கூடாது என்றும், தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரியும் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், உரிய தேதிகளில் தேர்வுகளை நடத்தலாம் என்று என்டிஏ அமைப்புக்கு அனுமதியளித்து.
இதைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்தத் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டநிலையில், வரும் 13-ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகளை நடத்த என்டிஏ அமைப்பு தீவிரமாகத் தயாராகி வருகிறது.
இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 15.97 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
கரோனா வைரஸ் காலத்தில் சமூக விலகலைப் பின்பற்றும் நோக்கில், தேர்வு மையங்கள் எண்ணிக்கையை 2,546லிருந்து, 3,843 ஆக அதிகப்படுத்தி இருக்கிறோம். தேர்வு அறையில் 24 மாணவர்கள் அமர்வதற்குப் பதிலாக 12 பேர் மட்டுமே அமர வைக்கப்பட உள்ளனர்.
தேர்வு மையத்துக்கு வெளியேயும் மாணவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் நுழைவுவாயில், வெளியேறும் பகுதி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. போதுமான சமூக இடைவெளி விட்டு தேர்வு மையத்துக்கு வெளியே மாணவர்கள் வரிசையாக நிற்கும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்கள் எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பது குறித்த அறிவுரைகள் தரப்பட்டு, முறையாக சமூக விலகலுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சரியான நேரத்துக்கு மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வருவதற்கு உதவும் வகையில், தேவையான பேருந்து போக்குவரத்தை ஏற்பாடு செய்யும்படி மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.
தேர்வு மையங்களில் சானிடைசர் வசதி இருக்கும், குறிப்பாக தேர்வு மையங்களில் வைக்கப்படும். தேர்வு நுழைவு அட்டைகள் பார்கோடு ரீடர் மூலம் பரிசோதிக்கப்படும். மாணவர்கள் அனைவரும் தேர்வு மையத்துக்குள் முகக்கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும். அங்கு தேர்வு மையம் சார்பில் தனியாக முகக்கவசம் வழங்கப்படும், சானிடைசர் வழங்கப்படும்.
மாணவர்கள் தேர்வு எழுத மையத்துக்குள் நுழையும் போது முகக்கவசம் வழங்கப்படும். அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.வேறுபாடு இருக்கக்கூடாது என்பதால் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
மேலும், ஒடிசா,மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள் நீட் தேர்வு நடக்கும் நாளில் தேவையான போக்குவரத்து வசதிகளை மாணவர்களுக்கு வழங்க உறுதியளித்துள்ளன. கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம், வரும் 13-ம் தேதி நீட் தேர்வுக்காக சிறப்பு ரயில் சேவையை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.