பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுள் காரணமா? மத்திய அரசு எதற்கு, ராணுவம் எதற்கு? கடவுளே அனைத்தையும் பார்க்கட்டும்: நிர்மலா சீதாராமனுக்கு சிவசேனா கண்டனம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: கோப்புப் படம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: கோப்புப் படம்.
Updated on
2 min read

இந்தியப் பொருளதாார வீழ்ச்சிக்குக் கடவுள் மீது பழிபோட்டால், மத்திய அரசு எதற்காக இருக்கிறது, ராணுவம் எதற்காக இருக்கிறது. அனைத்தையும் கடவுள் பார்ப்பார் என விட்டுவிடலாமே என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சிவசேனா கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் கடந்த வாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி அறிக்கையை வெளியிட்டது. அதில், நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடனா சாம்னாவில், அந்தக் கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எழுதிய கட்டுரையில் நிர்மலா சீதாராமனைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசுகிறார். ஆனால், பொருளாதார வீழ்ச்சி குறித்தும், அது தொடர்பான விஷயங்களையும் தொட்டுப் பேசவும் மறுக்கிறார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு கடவுள்தான் காரணம் என்று கடவுளைக் குற்றம் சாட்டுகிறார்கள். கடவுள்தான் குற்றவாளியாக அவர்கள் கூற்றுப்படி இருந்தால், எந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவது?

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கியதிலிரு்து லாக்டவுன் வரை, பொருளாதாரம் முற்றிலும் செயலிழந்துபோனது. ஆனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு கடவுளை நேரடியாகக் குற்றம்சாட்டிப் பழிபோடுகிறார். இது இந்துத்துவாவை அவமதிக்கும் செயல். இது என்னவிதமான இந்துத்துவா?

இந்தியா தற்சார்புப் பொருளாதாரமாக வளர்ந்து வரும் நேரத்தில் மத்திய அமைச்சரின் இந்தக் கருத்துகள் இந்தியாவுக்குப் பொருந்தவில்லை. கரோனா வைரஸ் பரவல் தொடங்கியதற்கு முன்பே, நாட்டின் பொருளாதாரம் நொறுங்கிவிட்டது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மனிதத் தவறுகளாலும், கவனக்குறைவான, அசட்டையான மனப்பாங்காலும் உண்டானவை.

கரோனா வைரஸும், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் கடவுளின் விருப்பம் என்று கூறினால், எதற்காக மத்திய அரசு ஒன்று தேவை, எதற்காக ராணுவம் தேவை. கடவுளே அனைத்தையும் பார்த்துக் கொள்ளட்டுமே.

நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு, பெரும்புயல், சூறாவளி போன்றவை யாராலும் தடுக்கமுடியாது. இவற்றைக் கடவுளால் உருவான இயற்கைச் சீற்றங்கள் என்று சொல்வார்கள்.

ஆனால், மனிதர்களால் ஏற்படும் தவறுகளுக்கும், கடமையைச் செய்வதில் தோல்வி அடைந்ததற்கும், தாமதமானதற்கும், கட்டுமானத் திட்டம் தாமதமடைந்ததற்கும் கடவுள் பெயரைக் காரணம் காட்டி மன்னிப்புக் கோருகிறார்கள்''.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in