Published : 06 Sep 2020 11:29 AM
Last Updated : 06 Sep 2020 11:29 AM

அடிப்படை உரிமைகள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட எதனீர் மடத்தின் பீடாதிபதி கேசவானந்த பாரதி சுவாமிஜி காலமானார்

எதனீர் மடத்தின் பீடாதிபதி கேசவானந்த பாரதி சுவாமிஜி : கோப்புப் படம்.

மங்களூரு

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள எதனீர் மடத்தின் பீடாதிபதி கேசவானந்த பாரதி சுவாமிஜி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்கில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுக்கொடுத்தவர் கேசவானந்த பாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதயநோய், சுவாசக் கோளாறு போன்ற உடல்நலக் குறைவால் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேசவானந்த பாரதி சுவாமி, இன்று அதிகாலை காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1961-ம் ஆண்டிலிருந்து எதனீர் மடத்தின் பீடாதிபதியாக கேசவானந்த பாரதி இருந்து வந்தார். அத்வைத தத்துவங்களைப் பரப்புவதோடு மட்டுமல்லாமல், சிறந்த கர்நாடக இசைப் பாடகராகவும் கேசவானந்த பாரதி திகழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் கேரளாவில் பாரம்பரிய யக் ஷகானா குழுவையும் நடத்திவந்தார்.

இந்தக் குழுவில் பாடகராகவும், இயக்குநராகவும் கேசவானந்த பாரதி இருந்தார். மேலும், எதனீர் மடத்தில் எண்ணற்ற இலக்கிய நிகழ்ச்சிகளையும் கேசவானந்த பாரதி நடத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் வரை நடக்கும் யக் ஷகானா சப்தகா, யக் ஷகானா தலமாடலே நிகழ்ச்சிகளை கேசவானந்த பாரதி மடத்தில் நடத்துவார். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் எதனீர் மடம் இருந்தாலும், கன்னட மக்கள் மீதும், கன்னட மொழி மீதும், ஆர்வலர்கள் மீது மிகுந்த பற்றாக கேசவானந்த பாரதி இருந்து வந்தார்.

கேசவானந்த பாரதி சுவாமி கடந்த 1973-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இன்றளவும் வரலாற்றுச் சிறப்பமிக்கதாக இருந்து வருகிறது.
இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 24,25,26, 29 பிரிவுகளைத் திருத்தி வங்கிகளைத் தேசியமயமாக்கியது, தனியார் சொத்துகளைத் தேவைப்பட்டால் அரசு கையகப்படுத்தலாம் என்று மாற்றியது.

இதன் முக்கிய அம்சம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சுதந்திரத்தைக் குறைக்கவோ, மாற்றவோ, திருத்தம் செய்யவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்பதாகும்

இதன்படி, எதனீர் மடத்தின் சொத்துகளை அப்போதைய கேரள அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, எதனீர் மடத்தின் பீடாதிபதியாக இருந்த கேசாவனந்த பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவருடைய வாதம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை நாடாளுமன்றத்தால் குறைக்கவோ, பறிக்கவோ முடியாது என்பதாகும். இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை ரத்து செய்யவோ, முறியடிக்கவோ கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள், 24, 25, 26 மற்றும் 29 செல்லத்தக்கதல்ல என்பதாகும். இந்த வழக்கில் கேசவானந்த பாரதி தரப்பில் வழக்கறிஞர் நானி பால்கிவாலா ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரிக்க, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சிக்ரி, 13 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை நிறுவினார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சிக்ரி தலைமையிலான 13 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 நீதிபதிகள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைத் திருத்த நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது என்று தீர்ப்பளித்தனர். ஆனால், 7 நீதிபதிகள் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x