

உத்தரப் பிரதேசம் மீரட்டில் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) பெயரில் போலியாக ஒரு அலுவலகம் திறக்கப்பட்டது. இதைக் காட்டி அயோத்தி ராமர் கோயில் நிதியில் பெயரில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் போலியாக நிதி திரட்டும் மோசடி நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அக்கோயிலை அதிகாரபூர்வமாகக் கட்டும் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் வங்கிக் கணக்கின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், ராமர் கோயிலின் பெயரில் நிதி திரட்டும் மோசடி தொடர்வது நின்றபாடில்லை. இந்தவகையில் உ.பி.யின் மீரட்டில் பொதுமக்களிடம் மோசடி செய்த நரேந்திர ராணா என்பவர் நேற்று சிக்கியுள்ளார்.
உ.பி.யின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மீரட் மாவட்ட கிராமங்களில் ராணா நேரில் சென்று இந்த வசூல் நடத்தி வந்துள்ளார். இதற்காக அவர் விஎச்பி ராமர் கோயில் நிதி எனும் பெயரில் போலியான ரசீதும் அச்சடித்து விநியோகித்துள்ளார்.
குறைந்தபட்சமாக ரூபாய் நூறு மற்றும் அதிகபட்சமாக ரூபாய் ஆயிரம் மட்டும் என நரேந்திர ராணா வசூல் செய்து வந்துள்ளார். இதில் பொதுமக்களுக்குச் சந்தேகம் வராமல் இருக்கும் பொருட்டு விஎச்பியின் பெயரில் ஒரு போலியான அலுவலகமும் மீரட்டில் திறந்து வைத்திருந்தார்.
இவர் மீது சந்தேகத்திற்கு இடையிலான தகவல்கள் மீரட்டின் விஎச்பி தலைவர்களுக்கு கிடைத்தன. இதனால், நரேந்திர ராணாவின் போலி அலுவலகம் சென்று நேரில் விசாரிக்கப்பட்டுள்ளது.
இதில், நரேந்திர ராணா செய்து வருவது மோசடி என்பது உறுதி செய்யப்பட்டு அவரைப் பிடித்து விஎச்பியினர் மீரட் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ராணா மீது வழக்குப்பதிவு செய்துள்ள மீரட் காவல் நிலையத்தார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுவரை, ரூ.23,000 வசூல் செய்துள்ள ராணா, கைதாகிவில்லை எனில் பல லட்சம் மோசடி செய்திருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இவரை போன்ற எவரிடமும் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து எச்சரிக்கை வெளியாகி வருகிறது.