அதிவேக அதிகரிப்பு: ஆகஸ்டில் மட்டும் மகாராஷ்டிராவில் 3.70 லட்சம் பேருக்கு கரோனா தொற்று; எச்சரிக்கை தேவை: உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே : படம் | ஏஎன்ஐ.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே : படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக 3.70 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களில் இன்னும் தீவரமாகும் என்பதால், அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்துக்கும் மேல் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர. ஒட்டுமொத்தப் பாதிப்பு 41 லட்சத்தைக் கடந்துள்ளது. 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இதில் நாட்டிலே அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலம், மகாராஷ்டிராதான், உயிரிழப்பிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களைவிட ஆகஸ்டில்தான் மகாரஷ்டிராவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மகாரஷ்டிராவில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 587 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஜூலை மாதத்தில் 2,41,820 பேர், ஜூன் மாதத்தில் 1,04,748 பேர் மட்டுமே கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாநிலத்தில் 4,31,719 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி கரோனா தொற்று 8,08,306 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரியிலிருந்து பார்க்கும்போது மாநிலத்தில் ஆகஸ்ட் மாதத்தில்தான் வேகமாக கரோனா தொற்று அதிகரி்த்துள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் 20 லட்சத்து 16 ஆயிரத்து 809 பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனைகளை அதிகப்படுத்தியதன் கராணமாக தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம்.
கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதிவரை 21,94,943 பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தன. இது செப்டம்பர் 1-ம் தேதி 42,11,752 பேருக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தன. அதிகமான பரிசோதனைகளால் கரோனா தொற்று அதிகரித்திருக்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவில் புதிதாக தொற்றால் பாதிக்கப்படும் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1 முதல் 5-ம் தேதிவரை மாநிலத்தில் 36,546 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 1 முதல் 5-ம் தேதிவரை இது 75,556 ஆக அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் 1-ம் தேதிவரை மாநிலத்தில் கரோனா உயிரிழப்பு 15,316 ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 1-ம் தேதிவரை 24,903 ஆக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் 5 ம் தேதிவரை 1,160 பேர் உயிரிழந்த நிலையில், செப் 1 முதல் 5-ம் தேதிவரை 1,373 பேர் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அதிகாரிகளிடம் கூறுகையில், “மும்பையில் கடந்த இரு நாட்களாக கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்கு கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் என்பதால், அதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும்.

மும்பையில் நாள்தோறும் 1000 முதல் 1100 பேருக்குப் பாதிப்பு இருந்த நிலையில், கடந்த இரு நாட்களாக 1,700 முதல் 1900 வரை கரோனா தொற்று அதிகரித்துள்ளது. மும்பையில் கூடுதலாக 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் படுக்கைகள் ஆக்ஸிஜன், ஐசியு வசதியுடன் உருவாக்கப்படும். ஒரு கரோனா நோயாளியிடம் தொடர்புள்ள 30 பேரை அடுத்த 48 மணிநேரத்தில் கண்டுபிடித்து தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியம்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in