பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகிக்கு எதிராக அவதூறு: ஒடிசா சென்று சர்ச்சைக்குரிய நபரைக் கைது செய்து அழைத்துச் சென்ற உ.பி. போலீஸார் 

பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்புப்படம்
பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்புப்படம்
Updated on
1 min read

பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவரை உத்தரப் பிரதேச போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஒடிசாவின் கட்டாக் மாவட்டம், குசும்பி கிராமத்தைச் சேர்ந்த 42 வயது நபரைக் கைது செய்து, டிரான்சிட் ரிமாண்ட் மூலம் உ.பி. போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், சிங்காவாலி அஹீர் போலீஸ் நிலையத்தின் ஆய்வாளர் ஷிவ் பிரதாப் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் அகமது பரப்பி வருகிறார் என்று கடந்த ஜூலை 10-ம்தேதி விஸ்வ இந்துபரிசத் அமைப்பின் நிர்வாகி குல்தீப் பஞ்சால் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் அளித்தபின், பாகிஸ்தான் நாட்டின் தொலைபேசி எண்ணிலிருந்து குல்தீப் பஞ்சாலுக்கு மிரட்டல் வந்துள்ளது. உருது மொழியில் எழுதப்பட்ட மிரட்டல் கடிதமும் வந்துள்ளது.

இதையும் குல்தீப் பஞ்சால் புகாராகப் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, ஐபிசியின் பல்வேறு பிரிவுகளில் ஹசன் அகமது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஹசன் அகமது மீது 124ஏ பிரிவான தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒடிசாவின் கட்டாக் மாவட்டம், குசும்பி கிராமத்தில் ஹசன் அகமது வசித்து வருகிறார் என்பதை அறிந்தோம்.

இதையடுத்து, உ.பி. போலீஸாரின் தனிப்படை அங்கு சென்று ஹசன் அகமதுவை நேற்று கைது செய்தனர். அவர்கள் கட்டாக்கிலிருந்து டிரான்சிட் ரிமாண்ட் பெற்று, ஹசன் அகமதுவை உ.பி. அழைத்து வருகின்றனர்.

ஹசன் அகமது மீது பாக்பத் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், இந்து தலைவர்களை அவதூறாக விமர்சித்தமைக்காக வாரணாசியில் 3 வழக்குகள், லக்னோவில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டாக் சென்று விசாரணை நடத்தியபோதுதான் அனைத்துக் குற்றங்களையும் ஹசன் அகமது செய்தது உறுதியானதால், அவரை போலீஸார் கைது செய்தனர்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in