Last Updated : 06 Sep, 2020 08:52 AM

 

Published : 06 Sep 2020 08:52 AM
Last Updated : 06 Sep 2020 08:52 AM

தேசிய ஜனநாயக கூட்டணியில் மாஞ்சி கட்சி இணைந்ததால் ராம் விலாஸ் பாஸ்வான் அதிருப்தி: மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி பெற பாஜகவிடம் பேரம்?

பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் சூழலில் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த எல்ஜேபி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி பெற பாஜகவிடம் பேரம் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலமாக உள்ள கட்சி லோக் ஜன சக்தி (எல்ஜேபி). தலித் தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய உணவுத்துறை அமைச்சராக உள்ளார். பாஜக தலைமையிலான இக்கூட்டணியில் பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தனது இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவையும் இணைத்துள்ளார். மாஞ்சியும் தலித் சமூகத் தலைவர் என்பதால் ராம் விலாஸ் பாஸ்வான் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதனால் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மாஞ்சி கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எல்ஜேபி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் பாஜக விடம் பேரம் பேசும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதில், கடந்த தேர்தலைவிட கூடுதலான தொகுதிகளை கேட்பதுடன் தனது மகன் சிராக் பாஸ்வானுக்கு மத்தியில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எல்ஜேபி எம்பிக்கள் வட்டாரம் ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "சிராக்பாஸ்வான் தொடர்ந்து முதல்வர் நிதிஷ் குமார் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் உருவான மோதலால்எங்களை மிரட்ட மாஞ்சியைகூட்டணிக்குள் கொண்டுவந்துள் ளார் நிதிஷ். இதில் பாதிப்பு ஏற்படாத வகையில் நாங்கள் பாஜகவிடம் மத்திய அமைச்சர் பதவி உள்ளிட்ட சிலவற்றை கேட்டு ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றனர்.

தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவதாகவும் பாஸ்வான் மிரட்டுவதாகக் கூறப்படு கிறது. லாலு பிரசாத் தலைமை யிலான மெகா கூட்டணி அல்லது காங்கிரஸுடன் இணைந்து மூன்றாவதாக ஒரு கூட்டணி அமைக்கவும் ராம் விலாஸ் பாஸ்வான் திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மீதான இறுதிமுடிவை எல்ஜேபியின் ஆட்சிமன் றக்குழு நாளை (7-ம் தேதி) கூடி முடிவு செய்ய உள்ளது.

கடந்த முறை பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், எல்ஜேபி 42-ல் போட்டியிட்டு வெறும் 2 எம்எல்ஏ-க்களை பெற்றது. மக்களவைத் தேர்தலில்7 தொகுதிகளில் பேட்டியிட்ட அக்கட்சிக்கு சிராக் பாஸ்வான் உள்ளிட்ட 6 எம்.பிக்கள் கிடைத்தனர். இதன் பிண்ணனியில் பாஜகவுக்கு ஆதரவான அலை பிஹாரில் வீசியதும் காரணமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x