

ரயில்வேயில் உள்ள 1.40 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்தார்.
1.40 லட்சம் காலியிடங்களுக்கு இதுவரை 2.42 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம் சாராத பிரிவுகளான கார்ட், அலுவலக கிளார்க் உள்ளிட்ட பல பிரிவுகளில் 35,208 இடங்கள் காலியாக உள்ளன.
ரயில்வே அமைச்சகத்தில் ஸ்டெனோ மற்றும் உதவியாளர்கள் பணியில் 1,663 காலியிடங்கள் உள்ளன.
ரயில்வே இருப்புப்பாதை பராமரிப்பு மற்றும் பாயின்ட்ஸ்மேன் பணிகளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 769 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு கரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை தேர்வுகள் நடத்த முடியவில்லை. இந்நிலையில் டிசம்பர் 15-ம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 1.40 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக, அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு இதுவரை தேர்வுகளை நடத்த முடியவில்லை.
இந்தக் காலிப்பணியிடங்களை நிரப்பும் கணினி அடிப்படையிலான தேர்வு வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கும். 3 வகையான பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
1.40 லட்சம் பணியிடங்களை நிரப்ப இதுவரை 2.42 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன. கரோனா பரவல் வருவதற்கு முன்பே தேர்வுகளை நடத்த எண்ணினோம். இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணியும் முடிந்துவிட்டது, கரோனா காரணமாகவே தேர்வுகளை நடத்த முடியவில்லை.
தற்போது ஜேஇஇ, நீட் தேர்வுகளை நடத்தி மத்திய அரசுக்கு அனுபவம் கிடைத்துவிட்டதால், ரயில்வே தேர்வுகளை நடத்தும் பணிகளும் விரைவில் தொடங்கும். தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.
ரயில்வேயில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களுக்கும் கணினிமுறையில் தேர்வு வைத்து ஆள் எடுக்க ரயில்வே பணி நியமன வாரியம் உறுதியாக இருக்கிறது. கரோனா வைரஸ் பரவல் குறித்து களச்சூழலை ஆய்வு செய்து வருகிறோம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.