

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, புதிய பதவிகளை உருவாக்குவது போன்றவற்றை நிறுத்திவைத்து மத்திய அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையால் குழப்பம் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவத்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு, அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கும் விடுத்த சுற்றறிக்கையில், புதிதாக எந்த வேலைவாய்ப்புகளும், பதவிகளும் உருவாக்குவதை, நியமிப்பதை பரிசீலனை செய்யுங்கள், செலவினத்துறையின் ஒப்புதலின்றி புதிதாக எந்தப் பதவியும் உருவாக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தது. கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையிலும், செலவுகளை முறைப்படுத்தவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவர் கூறுகையில், “குறைந்த நிர்வாகம், அதிகமான தனியார் மயம் என்பதைத்தான் மோடி அரசு சிந்தித்து வருகிறது. கரோனா காலத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசுப் பணிகளில் நிரந்தரமான ஊழியர்களை நியமிக்க மறுக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தைத் திருடி, தன்னுடைய நண்பர்களுக்கு மோடி அரசு உதவுகிறது. மக்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
எங்களின் மாற்று எண்ணங்களை, மாற்றுக் கருத்துகளை அடக்கலாம், ஆனால், குரல்களை ஒடுக்க முடியாது. இந்த உலகிற்கு எங்களின் எண்ணங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இந்த சுற்றறிக்கை விவகாரத்தைக் கையில் எடுத்து அறிக்கை வெளியிட்டதால் பெரும் சர்ச்சையானது. மேலும், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மத்திய அரசு, இந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்து நேற்று இரவு அறிக்கை வெளியிட்டது. அதில், “ கடந்த 4-ம் தேதி மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வெளியிட்ட சுற்றறிக்கை புதிய பதவிகளை உருவாக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எந்த விதத்திலும் பாதிக்காது, குறைக்காது.
மத்திய அரசில் எந்தவிதமான புதிய பதவிகளை உருவாக்கவும், காலியாக இருக்கும் இடங்களில் ஆட்களை நிரப்பவும் எந்தவிதமானத் தடையும் இல்லை. அரசின் வேலைவாய்ப்பு அமைப்புகளான எஸ்எஸ்சி, யூபிஎஸ்சி, ரயில்வே வேலைவாய்ப்பு வாரியம் உள்ளிட்டவை மூலம் எந்தவிதமான தடையும் இன்றி புதிய வேலைவாய்ப்புக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பணி தொடரும்'' என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.