

ஆந்திரா, தெலங்கானா மாநிலங் களில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு மயக்க ஊசி போட்டு வந்த மர்ம நபரை கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்துள்ளது. இதை வைத்து அந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில், கடந்த ஒரு மாதமாக பைக்கில் வரும் மர்ம நபர் பெண்களுக்கு ஊசி போட்டுவிட்டு தப்பி வருகிறார். இதுவரை மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 21 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மருத்துவ பரிசோதனை யில் ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த அடையாளங்களை வைத்து மர்ம நபரின் மாதிரி புகைப்படத்தை 2 முறை வெளியிட்டனர்.
மர்ம நபரைப் பிடிப்பதற்காக இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள முக்கிய சாலைகளில் 160 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. 49 தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஒரு வாரமாக தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத், நல்கொண்டா, கம்மம் ஆகிய மாவட்டங்களிலும் மர்ம நபர் மயக்க ஊசி போட்டுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றதாக காவல் நிலையங்களில் சிலர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரு பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஒரு பெண்ணுக்கு ஊசி போட்டுவிட்டு தப்பிச் சென்றபோது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த மர்ம நபரின் உருவம் பதிவாகி உள்ளது. கருப்பு நிற பைக்கில் செல்லும் அந்த நபர் குறித்து மேற்கு கோதாவரி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.