கல்புர்கியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கல்புர்கியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Updated on
1 min read

மூடநம்பிக்கைக்கு எதிராகவும், உருவ வழிபாட்டுக்கு எதிராகவும் பேசியதால் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தார்வாடில் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் மூத்த எழுத்தாளரும், முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம்.கல்புர்கி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 8.40 மணியளவில் அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

நேற்று அவரது உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தார்வாட் கர்நாடக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள‌ கேசிடி மைதானத்தில் வைக்கப்பட்டது. அப்போது கர்நாடக முதல்வர் சித்த ராமையா, அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ஜெயஸ்ரீ, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், குமாரசாமி, தார்வாட் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சோழன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் கல்புர்கியின் மனைவி உமா தேவி, மகன் விஜய், மகள்கள் பூர்ணிமா, ரூபா தர்ஷி உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினர்.

இதையடுத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட கல்புர்கியின் உடல் கர்நாடக பல்கலை. வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மூத்த எழுத்தாளரான கல்புர்கியின் மறைவையொட்டி, தார்வாட் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

உரைநடை இலக்கியத்தில் ஆழ மான புலமை மிக்க கல்புர்கியின் மறைவுக்கு கன்னட எழுத்தாளர் களும், பேராசிரியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கல்வெட்டு அறிஞராகவும், ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான கல்புர்கியின் கொலையை கண்டித்து மாணவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கர்நாடகா வில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in