

கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து லாக்டவுன் உத்தியினால் கிடைக்கும் பயன்களை அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியாதான் என்று ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் செப்டம்பர் இறுதிக்குள் இந்தியாவில் 65 லட்சம் பேர் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறார் ப.சிதம்பரம்.
இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்தது. ஒரே நாளில் மிக அதிகமாக 86,432 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ப.சிதம்பரம் கூறும்போது, “செப்டம்பர் இறுதிக்குள் 55 லட்சம் பேர் பாதிப்படைவார்கள் என்று கணித்திருந்தேன். நான் தவறாகக் கூறி விட்டேன். இந்த எண்ணிக்கையை இந்தியா செப்.20லேயே எட்டிவிடும், மாத இறுதியில் 65 லட்சம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
இவ்வளவு லாக்-டவுன்கள் மேற்கொண்டு அதன் பயன்களை அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியாதான் என்று தோன்றுகிறது.
21 நாட்களில் கரோனாவை தோற்கடிப்போம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். மற்ற நாடுகள் கரோனா விஷயத்தில் வெற்றி பெற்று வரும் நிலையில் இந்தியா ஏன் தோல்வியடைந்தது என்பதை பிரதமர் விளக்க வேண்டும்.
இன்னொரு ட்வீட்டில் ப.சிதம்பரம், பொருளாதார நிலையை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘2020-21 நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரம் சரிவு கண்டதற்கு விளக்க ஒரு வார்த்தை கூட இல்லை.
ஆனால் மக்களை திசைத்திருப்பும் பழைய வேலையைச் செய்து வருகிறது அதாவது V- வடிவத்தில் பொருளாதார மீட்பு இருக்கும் என்கிறது’ என்று விமர்சித்துள்ளார்.