

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 13 நாட்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் என்று இல்லாத அளவில் 86 ஆயிரத்து 432 பேருக்கு புதிதாகக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஆறுதல் தரும் விதமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்து 7 ஆயிரத்து 223 ஆக உள்ளது. இதன் மூலம் குணமடைவோர் விகிதம் 77.23% ஆக உள்ளது. ஆனால் குணமடைந்தோரில் எவ்வளவு பேர் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர், சாதாரண மிதமான நிலையிலிருந்து குணமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பது பற்றி சுகாதாரத்துறை தகவல்கள் இல்லை.
மொத்த கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்து 23 ஆயிரத்து 179 ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1089 பேர் மரணமடைய மொத்த இறப்பு எண்ணிக்கை 69,561 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கோவிட்டால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக 21 நாட்கள் ஆனது, அடுத்த 16 நாட்களில் 30 லட்சமாக அதிகரித்தது, தற்போது அடுத்த 13 நாட்களில் 40 லட்சத்தை பாதிப்பு எண்ணிக்கைக் கடந்துள்ளது
ஒரு லட்சம் பாதிப்பு ஏற்பட 110 நாட்கள் ஏற்பட்ட நிலையில் 50 நாட்களில் 10 லட்சம் பேருக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டனர், கரோனா பரவலின் வேகம் பரிசோதனையின் வேகத்துடன் தொடர்புடையது.
கரோனா பலி விகிதம் 1.73% ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் தற்போது 8,46,395 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். இது மொத்த கரோனா பாதிப்பில் 21.04% ஆகும்.
இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் 7ம் தேதி 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ல் 30 லட்சத்தைக் கடந்தது. இன்றைய தேதியில் 40 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுவரை 4 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 491 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை மட்டுமே 10 லட்சத்து 59 ஆயிரத்து 346 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 1089 பேர் கரோனாவுக்குப் பலியானதில் மகாராஷ்ட்ராவில் மட்டும் 378 பேர் பலியாகியுள்ளார்கள், இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை இங்கு 25,964 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் 116 பேர் பலியானதில் மொத்த பலி எண்ணிக்கை 6170 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 79 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 7,687 ஆக அதிகரித்துள்ளது. உ.பி.யில் 71 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 3,762 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மேலும் 58 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 3452 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாபில் மேலும் 49 பேர் பலியாக மொத்த எண்ணிக்கை 1,739 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் மேலும் 76 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 4276 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 13 பேர் பலியாக அங்கு பலி எண்ணிக்கை 4513 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் நேற்று 14 பேர் பலியானதில் மொத்த பலி எண்ணிக்கை 3076 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 30 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 1513 ஆக உள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.