

கர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டம் ஹொலேநார் சிபூர் அருகே சிகாரனஹள்ளி கிராமம் உள்ளது. இங்குள்ள ஸ்ரீ பசவேஸ்வரா கோயிலில் ஸ்ரீ சக்தி சங்கம் என்ற பெண்கள் தன்னார்வ குழு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி சிறப்பு பூஜை நடத்தியது. இதில் மற்ற பிரிவைச் சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து 4 தலித் பெண்களும் பங்கேற்றனர்.
இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தலித் பெண்களை தரக்குறைவாக திட்டி உள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட தலித் ஆண்களை தாக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து மறுநாள் ஆதிக்க சாதியினர் ஒன்று கூடி, “தலித் பெண்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் தீட்டு ஏற்பட்டுவிட்டது. கோயிலை சுத்தமாக கழுவி, மீண்டும் அபிஷேக சடங்கு நடத்த வேண்டும். இதற்கு தலித் பெண்கள் ரூ.1000 அபராதமாக செலுத்த வேண்டும். கோயிலின் தெய்வீக தன்மையைக் காக்க வேண்டுமெனில், இனி தலித் மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது” என தீர்மானம் நிறைவேற்றினர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தலித் பெண்கள், அபராதம் செலுத்த மறுத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தையும், நீதி மன்றத்தையும் நாடப்போவதாகவும் தெரிவித்தனர். அதற்கு காவல் நிலையத்துக்கு சென்றால் தலித் மக்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என ஆதிக்க சாதியினர் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து சிகாரனஹள்ளி கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரும், தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான தாயம்மா கூறும்போது, “கடந்த 2001-ல் ஸ்ரீ சென்ன பசவேஸ்வரா கோயில் கட்டுவதற்கு தலித் மக்களும் நன்கொடை வழங்கியுள்ளனர். எனவே இந்தக் கோயிலில் தலித் மக்களுக்கும் பங்கு இருக்கிறது.
தலித் பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தபோது தேவராஜா, முனி ராஜு ஆகிய 2 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தட்டிக்கேட்டதால் என்னை அவர்கள் தாக்க முயன்றனர். இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் செய்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.
சமூக ஆர்வலர்கள் கண்டனம்
தலித் சங்கர சமிதியின் தலைவர் மாவள்ளி சங்கர், ‘தி இந்து'விடம் கூறும்போது, ‘சிகாரனஹள்ளி சம்ப வத்துக்கு காரணமானவர்கள் மீது வன்மைகொடுமை தடுப்பு சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து ஹாசன் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் என்.ஆர்.புருஷோத்தமன் கூறும்போது, “சிகாரனஹள்ளி விவகாரம் தொடர்பாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்து கூடிய விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.