24 ஆயிரம் ஜாமீன் தொகை கட்ட முடியாமல் 12 ஆண்டுகளாக உ.பி. சிறையில் வாடும் கைதி

24 ஆயிரம் ஜாமீன் தொகை கட்ட முடியாமல் 12 ஆண்டுகளாக உ.பி. சிறையில் வாடும் கைதி
Updated on
2 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொலை வழக்கில் சிக்கிய ஒருவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் ஜாமீன் கிடைத்தும், ரூ.24 ஆயிரம் ஜாமீன் தொகை செலுத்த முடியாமல் அவர் லக்னோ சிறையில் இருந்துவருகிறார்.

இவரை போலவே நீண்ட காலம் சிறையில் வாடிய மற்றொருவர் அரசியல்வாதியின் நட்பால் விடுதலை அடைந்துள்ளார்.

மேற்கு உ.பி.யின் பாக்பத் மாவட்டம், பண்டுவா என்ற கிராமத்தை சேர்ந்தவர் வினோத் சவுத்ரி. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் பக்கத்து வீட்டில் நடந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் இவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு உ.பி. உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் தொகையாக ரூ. 24,000 செலுத்திவிட்டு சிறையில் இருந்து விடுதலையாகலாம் என உத்தரவிட்டது. ஆனால், கூலிவேலை செய்து வந்த வினோத் சவுத்ரியால் இத் தொகையை செலுத்த முடியாமல் கடந்த 12 ஆண்டுகளாக அவர் லக்னோ சிறையில் வாடி வருகிறார்.

இது குறித்து வினோத்தின் மகன் சூரஜ் சவுத்ரி ‘தி இந்து’விடம் கூறும்போது, “நாங்கள் பின் தங்கிய சமூகத்தினர் என்பதால் எங்கள் கிராமத்தில் உயர்குடியினர் சிலர் எனது தந்தையை இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டனர். நான் இங்கு சாலையோரம் உள்ள டீக்கடையில் வேலை பார்க்கிறேன். ரூ.5000 மாதச் சம்பளத்தில் எனது குடும்பத்தை காப்பாற்றவே போராடி வருகிறேன். இதனால் ஜாமீன் தொகையை செலுத்த முடியவில்லை” என வருந்தினார்.

வினோத் சவுத்ரியை போல், உ.பி.யில் ஜாமீன் தொகை செலுத்தமுடியாமல் ஜெய்ராம் என்ற கைதி 21 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். ஆனால் சிறையில் அரசியல் பிரமுகர் ஒருவரின் நட்பு கிடைத்ததால் அவர் விடுதலையானார்.

ஒடிஸா மாநிலத்தின் காலாஹண்டி பகுதியைச் சேர்ந்த ஜெய்ராம், உ.பி.யின் ராம்பூரில் போலி மருத்துவர் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 1989-ல் அந்த மருத்துவர் கொல்லப்பட்டபோது, கொலைப்பழி ஜெய்ராம் மீது விழுந்து கைது செய்யப்பட்டார். இவர் ரூ.8000 ஜாமீன் தொகை செலுத்த முடியாமல் பரேலி சிறையில் இருந்துவந்தார்.

இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு சுயேச்சை எம்எல்ஏ ராஜா பய்யா என்பவர், மாயாவதி அரசால் கைது செய்யப்பட்டு பரேலி சிறையில் அடைக்கப் பட்டார் (ராஜா பய்யா தற்போது உ.பி. சமாஜ்வாதி கட்சி அரசில் அமைச்சராக உள்ளார்). இவருக்கும் ஜெய்ராமுக்கும் சிறையில் கைப்பந்து விளையாடும்போது நட்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜாமீன் தொகையை ராஜா பய்யா செலுத்தியதால் ஜெய்ராம் விடுதலையானார்.

நிரம்பி வழியும் சிறைகள்

இது குறித்து மனித உரிமை மக்கள் விழிப்புணர்வு குழுவின் செயல் இயக்குநர் லெனின் ரகுவன்ஷி ‘தி இந்து’விடம் கூறும்போது, “மிகச்சிறிய ஜாமீன் தொகை செலுத்த முடியாமல் ஆயிரக்கணக்கான ஏழைகள் உ.பி. சிறைகளில் பல ஆண்டுகளாக வாடி வருகின்றனர். இது தொடர்பாக கொள்கை அளவில் முடிவு எடுக்காமல் உ.பி. அரசும் பாராமுகமாக இருந்து வருகிறது” என்றார்.

அளவுக்கு அதிகமான கைதிகளால் உ.பி.யில் உள்ள சிறைகள் நிரம்பி வழிகின்றன. இம்மாநிலம் முழுவதிலும் உள்ள சிறைகளில் 48,970 கைதிகளை அடைக்க மட்டுமே வசதி உள்ளது. ஆனால் தற்போது 84,228 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in