

கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூருவில் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) தொடர்ந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய முகமது பை, ஃபரூகான் பை, மருத்துவர் உஸ்மான் கானி, முகமது அப்துல் மஜித், மருத்துவர் ஷபில் அகமது (38), முகமது பஷத்துல்லா கோரி, சித்திகி பி உஸ்மான் ஆகிய 7 பேரும் தலைமறைவாகினர்.
நாடு முழுவதும் பல்வேறு தீவிரவாத வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. ஏழு பேரும் சவுதி அரேபியாவில் பதுங்கி இருப்பதாக சந்தேகித்த என்ஐஏ, சர்வதேச போலீஸாரின் உதவியோடு அவர்களை கைது செய்ய முயற்சி செய்தது. ஆனால் 7 பேரையும் கைது செய்ய முடியவில்லை.
கடந்த வாரம் சவுதி அரேபியாவில் மருத்துவர் ஷபில் அகமதுவை (38), என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். வேறு சிலரையும் பிடிப்பதற்காக அதிகாரிகள் இந்த கைதை ரகசியமாக வைத்திருந்தனர்.
கடந்த வாரம் ஷபில் அகமதுவை டெல்லி அழைத்து வந்த அதிகாரிகள், நேற்று முன் தினம் பெங்களூருவில் உள்ள சிறப்பு தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ விசாரிக்கிறது. லஷ்கர் - இ - தொய்பாவுக்கு ஆள் சேர்த்தது, நிதி திரட்டி கொடுத்தது, சவுதி அரேபியாவில் அல் காய்தா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டது ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இந்தியாவில் அல் காய்தா அமைப்பை தொடங்க நிதியுதவி செய்ததாக கடந்த 2017-ல் மருத்துவர் ஷபில் அகமது மீது டெல்லி சிறப்பு புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாகவும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.