

கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சஜ்ஜன் குமார் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உச்ச நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
உடனடியாக விசாரித்து ஜாமீன் வழங்குவதற்கு இது ஒன்றும் சிறிய வழக்கு அல்ல. கரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது காணொலிக் காட்சி முறையில் வழக்குகளை விசாரித்து வருகிறோம். என்றைக்கு வழக்கமான முறையில் நீதிமன்றம் இயங்குமோ, அன்றைக்கு சஜ்ஜன் குமாரின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.