

மாவட்ட நீதிபதி ஒருவருக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கை கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
நீதித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட இந்த மனு தொடர்பாக மத்தியப் பிரதேச தலைமை பதிவாளர் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இப்போதெல்லாம் இது ஒரு வழக்கமாகி வருகிறது, யாரவது நீதிபதி பதவி உயர்வுக்கான பரிசீலனைப் பட்டியலில் இருந்தால் அவர் மீது பாலியல் புகார் தொடுப்பது என்பது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
மேலும் இந்த நீதிபதிக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் விசாரணைக்குப் பச்சைக் கொடி காட்டிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தது.
ஆகஸ்ட் 14ம் தேதியன்று மாவட்ட நீதிபதி இது தொடர்பாக மேற்கொண்ட மனுவை தள்ளுபடி செய்த ம.பி உயர்நீதிமன்றம் பாலியல் புகார் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற அனுமதியளித்தது.
மார்ச் 7, 2018-ல் நீதித்துறை பெண் அதிகாரி ஒருவர் மாவட்ட நீதிபதிக்கு எதிராக பணியிட பாலியல் துன்புறுத்தல் என்று புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய விசாரணை தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மாவட்ட நீதிபதி சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.பாலசுப்பிரமணியன், சச்சின் ஷர்மா ஆகியோர் வைத்த வாதங்களைக் கவனமாகப் பரிசீலித்த அமர்வு, தலைமை பதிவாளர் மற்றும் பாலின விவகாரம் மற்றும் உள் புகார்கள் கமிட்டிக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது.
மேலும் யாராவது நீதிபதி உயர் நீதிமன்ற பதவிகளுக்காக பரிசீலனைப் பட்டியலில் இருக்கும் போது அல்லது பதவி உயர்வு மண்டலத்தில் இருக்கும் போது இப்படிப்பட்ட புகார்கள் எழுவது வழக்கமாகி வருகிறது என்று அமர்வு கருத்து தெரிவித்தது.