

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை படுமோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதற்கு இணங்கள் கடந்த 3 வாரத்தில் 3வது சம்பவமாக 3வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது லக்மிபூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதே மாவட்டத்தில் இது 3 வாரத்தில் நிகழும் 3வது சம்பவமாகும்.
இந்த சம்பவத்தில் 3 வயது சிறுமியின் உடல் காயங்களுடன் கரும்பு வயலில் கண்டெடுக்கப்பட்டது, அங்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்திற்கு அருகில் சிங்காகி பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தை புதனன்று காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டது.
“பிரேதப் பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டுள்ளது, நான் இப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தான் உள்ளேன். 7 பேர் கொண்ட தனிப்படை விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். நானே தேடல் பணியில் ஈடுபட்டேன். தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது, கடும் தண்டனை கிடைக்கும் வரை ஓய மாட்டேன்” என்று போலீஸ் உயரதிகாரி சத்யேந்திர குமார் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தேவைப்பட்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டமும் குற்றவாளி மீது பாயும் என்றார் சத்யேந்திர குமார்.
கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை தன் புகாரில், தன் குடும்பத்துடன் இருந்த பகைமையினால் லேக்ராம் என்பவர்தான் தன் குழந்தையைக் கடத்தி இந்தக் கொடுமையைச் செய்ததாக தெரிவித்துள்ளார்.
கேரி மாவட்டத்தின் லக்மிபூரில் சமீபத்தில் 17 வயது தலித் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், இவரும் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். இவரது சிதைந்த சடலம் குளம் ஒன்றின் அருகே கிடந்தது
இதற்கு முன்னதாக இதே மாவட்டத்தில் 13 வயது சிறுமியும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நடந்தது.
இந்தச் சிறுமி வயலுக்கு மதியம் சென்று வீடு திரும்பவிலை. இவரது சடலமும் கரும்பு வயலில் கிடந்தது.
இந்தச் சம்பவங்கள் யோகி ஆதித்யநாத் அரசின் மீது அங்கு கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.