Published : 04 Sep 2020 07:08 AM
Last Updated : 04 Sep 2020 07:08 AM

நாட்டிலேயே முதல் முறையாக இடைபாலின குழந்தைகளுக்காக தாலாட்டுப் பாடல்: கேரள மக்களை உருக வைத்த தெய்வத்தின் மகள்

விஜயராஜா மல்லிகா

‘ஆராரோ.. ஆரிரரோ’ என தாலாட்டுச் சத்தம் கேட்டு தூங்கிய பொழுதுகள் சுகமானவை. குழந்தையின் வரவு சொந்தங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறது. அதேநேரம் ஆண் என்றோ, பெண் என்றோ கூறமுடியாத ஒரு நிலையில், வீட்டுக்குள் இருந்தே அக்குழந்தை மீதான நிராகரிப்பும் தொடங்கி விடுகிறது. இப்படியான சூழலுக்கு மத்தியில் இடைபாலின குழந்தைகளுக்காகவே சிறப்பு தாலாட்டுப் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் கேரளத்தின் முதல் திருநங்கை கவிஞர் விஜயராஜா மல்லிகா.

“ஆண் அல்ல.. பெண் அல்ல.. என் கண்மணி நீ..என் தேன்மணியல்லோ.. தேன்மணி” எனத் தொடங்கும் அந்த மலையாளப் பாடலில் “ஷாபமல்லா, பாபமல்லா ஓமானே நீ, எண்ட ஜீவிதத்தில் வன்னுதிச்ச பாக்யதாரம்” என்னும் வரிகள் நம்பிக்கையை படரவிடுகிறது. “சாபமோ, பாவமோ அல்ல. நீ என் அதிர்ஷ்ட நட்சத்திரம்” என்பது இதன் அர்த்தம். இடைபாலின நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கான நம்பிக்கையை, அவரது தாயே தூண்டும் வகையில் இந்த தாலாட்டுப் பாடல் எழுதப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை பிறக்கும் போது ஆண், பெண் அல்லது இடைபாலினம் என்னும் இந்த 3 நிலைகளில் மட்டுமே பிறக்க முடியும். உலக மக்கள் தொகையில் 1.7 சதவீத இடைபாலின மக்கள் உள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

குரோமோசோம் வேறுபாட்டால் இடைபாலின குழந்தைகள் பிறக்கின்றனர். அறிவியல் உலகில் இவர்கள் இடையிலங்கம் என அழைக்கப்படுகின்றனர்.

நாட்டிலேயே இடைபாலின குழந்தைக்காக எழுதப்பட்ட முதல் தாலாட்டுப் பாடல் இதுதான். வெறுமனே தாலாட்டுப் பாடலாக மட்டும் இல்லாமல் இதை காணொலி வடிவிலும் கவிஞர் விஜயராஜா மல்லிகா கொண்டு வந்துள்ளார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு

‘இந்து தமிழ்’ நாளிதழிடம் விஜயராஜா மல்லிகா கூறியதாவது: இடைபாலின குழந்தையிடம் மற்ற எவரையும்விட தாய்தான் அதிக நேசத்தைக் காட்ட வேண்டும். அவர்கள் கொடுக்கும் நம்பிக்கையால்தான் அவர்களின் வளரும் பருவமே இருக்கிறது. அதைத்தான் தாயின் மொழியாக, நம்பிக்கை வரியாக இந்த தாலாட்டு கடத்தும்.

‘நீ என் வானவில். என் மகனோ அல்லது மகளோ அல்ல’ எனும் இதில் வரும் வார்த்தைக்கு குடும்பத்தினர் உயிர் கொடுத்து விட்டாலே நிராகரிப்புகள் நொடி பொழுதில் அரவணைப்புகளாகிவிடும். கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் “இடைபாலின குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களின் இயற்கையான வாழ்வுக்கு இடையூறு செய்ய கூடாது” என தீர்ப்பு கொடுத்துள்ளது.

ஆனால் நன்கு படித்திருக்கும் பெற்றோர்களே தங்கள் குழந்தை இடைபாலினம் என்று தெரிந்தால் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள். இந்த கவிதை வரிகளை காணொலியாக பார்க்கும் தாய்க்கு அந்தச் சூழலில் தன் குழந்தைக்கு அரணாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும். இது சமூக மாற்றத்துக்கான முயற்சி. இந்தக் கவிதையை வீடியோ வடிவில் கொண்டுவர முயன்றதும் இதற்கு நிலம்பூர் சுனில்குமார், ஷினி அவந்திகா ஆகியோர் இசையும், குரலும் கொடுத்து பாடியிருக்கின்றனர். டாக்டர் சந்தியா மோகினி ஆட்டத்தின் ஊடே இந்த 5 நிமிட கவிதைக்கு அழகூட்டியிருக்கிறார்.

6-ல் தமிழ்ப் பாடல் வெளியீடு

கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையவழியில் இந்தப் பாடலை வெளியிட்டோம். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது நிறைவைத் தருகிறது. இதேபாடல் தமிழில் எனது நண்பர் பத்மகுமார் பரமேஸ்வரனால் மொழிபெயர்க்கப்பட்டு, ஹரிம்புல ராதா பாடியிருக்கிறார். தமிழ்ப் பாடல் வரும் 6-ம் தேதி வெளியாகிறது. கண்ணதாசன் தொடங்கி வாலி வரை யாரும் இடைபாலின குழந்தைக்கு தாலாட்டுப் பாடலை எழுதவில்லை. அந்த சமூகத்தின் குரலும் ஆழமாக இலக்கியங்களில் பதிவு செய்யப்படவில்லை. அதை செய்ய வேண்டிய பொறுப்பு இந்த தலைமுறைக்கு இருக்கிறது. இவ்வாறு விஜயராஜா மல்லிகா கூறினார்.

திருநங்கை கவிஞரான விஜயராஜா மல்லிகா தனது ‘தெய்வத்தின் மகள்’ எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் மலையாள படைப்புலகுக்கு அறிமுகமானார். சென்னை பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் எம்.ஏ. மலையாளம் பயில்வோருக்கு இந்த தொகுப்பு பாடத்திட்டமாக உள்ளது. இவரது அனைத்து படைப்புகளும் விளிம்புநிலை மக்களின் வாழ்வை பேசுபவை ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x