Published : 04 Sep 2020 07:05 AM
Last Updated : 04 Sep 2020 07:05 AM

இந்தியாவில் யாருக்கு ஆதரவாகவும் பேஸ்புக் நிறுவனம் செயல்படவில்லை: காங்கிரஸ் புகாருக்கு விளக்கம்

புதுடெல்லி

இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைக் குழு, ஆளும் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக எழுந்துள்ள புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் கேட்டு பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சுகர்பெர்க்குக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான கே.சி.வேணுகோபால் அண்மையில் கடிதம் எழுதினார்.

அதில், “இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடு, பாரபட்சமானதாகவும் நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தில் குறுக்கிடுவதாகவும் அமைந்துள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைக் குழு செயல்பாடு குறித்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து, பேஸ்புக் நிர்வாகம் கூறியுள்ளதாவது: நாங்கள் யாருக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை. பாரபட்சமற்ற முறையில் செயல்படவே விரும்புகிறோம். அனைத்து தரப்பு மக்களும் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வைக்கும் இடமாக பேஸ்புக் சமூக வலைதளம் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஒரு சாராருக்கு நாங்கள் ஆதரவாக செயல்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்.

மேலும் இந்தியாவில் பொது வாழ்க்கையில் இருப்பவர்களால், பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட வெறுப்பு கருத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. வரும் காலத்தில் அதுபோன்ற கருத்துகள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டால் அதுவும் நீக்கப்படும். சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் தளமாக சமூக வலைதளமாக பேஸ்புக்கை மாற்றுவதற்காக நேர்மையுடன் செயல்படுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x