

கேரளாவில் அடுத்த இரண்டு வாரங்களில் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
''கேரளாவில் இன்று 1,553 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 317 பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கரோனா பாதித்தவர்களில் 164 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 160 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 133 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 131 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 118 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 93 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 91 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 87 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 74 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 65 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 58 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 44 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 18 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 10 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கேரளாவில் கரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 90 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 28 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர்.
கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 1,391 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதில் 156 பேருக்கு எப்படி, எங்கிருந்து நோய் பரவியது எனத் தெரியவில்லை. இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 40 பேருக்கு நோய் பரவியுள்ளது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 1,950 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,732 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 21,116 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 30,342 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சிபிநாட், ட்ரூனாட் உள்பட இதுவரை மொத்தம் 17,55,568 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுதவிர சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட சமூக நெருக்கமுள்ள 1,80,540 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று புதிதாக நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் பட்டியலில் 8 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருந்து 14 இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் பட்டியலில் 569 இடங்கள் உள்ளன.
கேரளாவில் நோய்த் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்த முடிந்தது. கடந்த மாதம் எதிர்பார்த்த அளவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்ததாலும், சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கை காரணமாகவும்தான் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. கடந்த மாதத்தில் 10,000 முதல் 20,000 வரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. ஆனாலும், நோய்ப் பரவல் அதிகரித்தது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவுக்குக் கடந்த சில வாரங்களில் ஏராளமானோர் வந்துள்ளனர். எனவே, அடுத்த இரண்டு வாரங்களில் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊரடங்கு சட்ட நிபந்தனைகளைத் தளர்த்தி உள்ளது. மாநிலத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எல்லாக் காலத்திலும் அனைத்தையும் மூடி வைத்திருக்க முடியாது. பொதுமக்கள் கவனத்துடன் இருந்தால் மட்டுமே நோயின் தீவிரத்தைக் குறைக்க முடியும். அக்டோபர் மாத இறுதிக்குள் நோயின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். தனிமை முகாம் நிபந்தனைகளை மீறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஊரடங்கு சட்டத்திற்குப் பின்னர் கேரளாவுக்கு 9 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்துள்ளனர். சரியாகச் சொல்லவேண்டும் என்றால் 9,10,684 பேர் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 5,62,693 பேரும், வெளிநாடுகளில் இருந்து 3,47,991 பேரும் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 61.26 சதவீதம் பேர் நோய்த் தீவிரம் உள்ள பகுதியில் இருந்து வந்துள்ளனர்''.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.