

ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகள் இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும் எனக் கருதி அந்த விளையாட்டுகளுக்குத் தடை விதித்து ஆந்திரப் பிரதேச அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான கேபினட் அமைச்சரவை இன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம், ரம்மி, போக்கர் ஆகியவற்றுத் தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக ஆந்திரப் பிரதேச விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் அமைச்சரவை அனுமதியளித்தது.
இதுகுறித்து மாநிலத் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
''ஆந்திர மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் நலனுக்காகவும், தவறான பாதையில் செல்வதைத் தடுக்கும் வகையிலும், ஆன்லைன் மூலம் நடக்கும் சூதாட்டம், ரம்மி, போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க மாநில அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதற்காக 1976 ஆந்திர விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் அனுமதியளிக்கப்பட்டது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆன்லைன் விளையாட்டுகளை அரசின் உத்தரவுகளை மீறி நடத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் போட்டியாளர்கள் முதன்முதலாகப் பிடிபட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
2-வது முறையாக அதே தவறைச் செய்தால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவோர் பிடிபட்டால் அவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்''.
இவ்வாறு வெங்கடராமையா தெரிவித்தார்.