

எனக்கு ஓராண்டாக முகநூல் கணக்கே கிடையாது. நான் எப்படி வெறுப்புக் கருத்துகளைப் பரப்ப முடியும். காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தால் ஃபேஸ்புக் நிறுவனம் இயங்குகிறது என்று பாஜக எம்எல்ஏ ராஜா சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தனது ஃபேஸ்புக் கணக்கில் மத விரோதத்தைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வைப் பரப்பும் கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
முஸ்லிம்கள் குறித்தும், ரோஹிங்கியா அகதிகளைச் சுட்டுத்தள்ள வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக கடந்த மாதம் 14-ம் தேதி அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் ஃபேஸ்புக் வாயிலாக வெறுப்புணர்வை, மத துவேஷத்தைப் பரப்பும் கருத்துகள் பரப்பப்படுகின்றன.
ஆனால், ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேட்டின் செய்தி இந்தியாவில் பெரும் பிரச்சினையைக் கிளப்பியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைக் கையிலெடுத்து, இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும், இந்தியப் பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும் என்று வலியுறுததின.
மேலும், தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்றக் குழு முன், ஃபேஸ்புக் இந்தியாவின் அதிகாரி அஜித் மோகன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்தச் சூழலில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் ஃபேஸ்புக் கணக்கு, இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கி ஃபேஸ்புக் நிறுவனம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ராஜா சிங் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''எனக்குக் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஃபேஸ்புக் கணக்கு சொந்தமாகக் கிடையாது. யூடியூப், ட்விட்டர் மட்டுமே வைத்துள்ளேன்.
கடந்த 2018, அக்டோபர் 8-ம் தேதி எனது ஃபேஸ்புக் பக்கத்தை யாரோ சிலர் ஹேக் செய்துவிட்டார்கள் என்று ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருக்கிறேன். அதன்பின் 2019-ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் கணக்குத் தொடங்கி அதையும் நீக்கிவிட்டேன்.
கடந்த ஓராண்டாக எனக்கு ஃபேஸ்புக் கணக்கு இல்லாத நிலையில் என்னுடைய கணக்கை எவ்வாறு நீக்க முடியும். என்னுடைய ஆதரவாளர்கள் யாரேனும் ஃபேஸ்புக்கில் கணக்குத் தொடங்கி இருக்கலாம்.
ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கு எதிராகவும் கூறி வருகிறார்.
ஏஐஎம்ஐஎம் கட்சியும் இதேபோன்று பாஜக குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவதூறாகவும், பொய்யான கருத்துகளையும் பரப்புகின்றன. அவர்களின் கணக்கையும் ஃபேஸ்புக் நிறுவனம் நீக்க வேண்டும்.
காங்கிரஸ்கட்சியின் அழுத்தத்தின் பெயரில் ஃபேஸ்புக் நிறுவனம் இயங்குகிறது என நான் நினைக்கிறேன்.
நான் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதி, எனக்கு புதிதாகக் கணக்கு வேண்டும் எனக் கேட்பேன், அனைத்து விதிமுறைகளுக்கும் கட்டுப்படுகிறேன் எனத் தெரிவிப்பேன். ஃபேஸ்புக் பயன்படுத்த எனக்கு உரிமை இருக்கிறது, நான் அனுமதி பெறுவேன்''.
இவ்வாறு பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்தார்.