

பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்விஎச்பி, தீண்டாமை ஒழிப்பு முகாம்கள் நடத்துகிறது. அதன், உதவிக்காக நாட்டின் முக்கிய சாதுக்கம் முகாமில் பங்கேற்கின்றனர்
ராமர் கோயில் போராட்டத்திற்காக துவக்கப்பட்ட இந்துத்துவா அமைப்பு விஎச்பி. தற்போது அயோத்தியின் கோயில் பிரச்சனை முடிவிற்கு வந்திருப்பதால், வேறு சில மக்கள் பிரச்சனைகளில் அது கவனம் செலுத்துகிறது
இதில் முக்கியமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூக மக்கள் பாதிக்கப்படும் தீண்டாமையை ஒழிப்பது இடம் பெற்றுள்ளது. இதனால், அவர்கள் இந்துக்களிடம் இருந்து விலகிச் செல்லும் நிலையும் உருவாவதாக விஎச்பி கருதுகிறது.
இதை தவிர்த்து அனைவரையும் இந்துக்கள் என ஒன்று சேர்க்கும் வகையில் விஎச்பி நடவடிக்கை எடுக்க உள்ளது. இதற்காக, தீண்டாமை ஒழிப்பு முகாம்களை சாதுக்கள் உதவியுடன் நாடு முழுவதிலும் நடத்த உள்ளது.
இது குறித்து உ.பி. மாநில விஎச்பியின் முக்கியத் தலைவரான தேவேந்திரா கூறும்போது, ‘‘தீண்டாமை வெற்றியடைய விஎச்பி அனுமதிக்காது. தற்போது பரவிவரும் கரோனோ பரவல் சுழலில் இது அதன் பெயரில் அதிகமாகி வருகிறது.
எனவே, அதை ஒழிக்கும் நடவடிக்கையில் விஎச்பி தீவிரமாக இறங்கும். இதில் முக்கிய சாதுக்களின் உதவிகளையும் நாம் பயன்படுத்துவோம்.’’ எனத் தெரிவித்தார்.
துவக்கக்கட்டமாக உ.பி.யில் துவங்கும் இந்த தீண்டாமை ஒழிப்பு முகாம்கள் படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் நடத்தப்பட உள்ளன. இதற்காக மாநிலங்களின் முக்கிய நகரங்களில் துவக்க விழாக்களும் திட்டமிடப்பட்டு வருகின்றன.