

ஆன்மிக மறுமலர்ச்சி பூமியாக திகழும் புத்தகயாவை ஆன்மிகத் தலைநகராக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிஹார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோயிலில் நடைபெற்ற இந்து, பவுத்த மத மாநாட்டில் பங்கேற்ற மோடி பேசியதாவது:
இந்தியாவுக்கும் மற்ற பவுத்த நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார பிணைப்புக்கு உதவும் வகையில், புத்தகயாவை ஆன்மிகத் தலைநகராக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வழிபாட்டுத்தலமாக புத்தகயாவை மரியாதைக்கு உரியதாக உலகெங்கிலும் வாழும் பவுத்த மதத்தினர் அங்கீகரிக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு நாமும் புத்த கயாவை ஆன்மிகத் தலைநகராக மேம்படுத்துவது சரியானதாகும்.
இந்த புனிதத் தலத்திலிருந்து ஆன்மிகத் தேவையை பூர்த்தி செய்வதற்காக பவுத்த மத நாடுகளுக்கு எல்லா உதவிகளையும் வழங்க இந்திய அரசு தயாராக உள்ளது.
இந்தியாவின் மணிமகுடமாக திகழ்ந்தவர் புத்தர். இந்தியா அனைத்து வழிபாட்டு முறைகளையும் அங்கீகரித்து மகிழும் நாடு. இந்து மதத்தை மட்டும் அல்லாமல் உலகையே சீர்திருத்தம் செய்தவர் புத்தர் என்ற முறையில் நான் அவரை மரியாதையுடன் வணங்குகிறேன்.
போட்டிமிகு இந்த உலகில் அனைவரும் வாழ்வதற்கு புதிய உலக பார்வையை, சிந்தனையை கொடுத்தவர் புத்தர். பல்வேறு ஆன்மிக மகான்களின் உருவாக்கம்தான் இந்து மதத்தின் தரம். அந்த மகான்களில் முதன்மையானவர் புத்தர். இந்தியா மதச்சார்பற்ற நாடாக திகழ்வதற்கு இவையெல்லாம் காரணம் ஆகும்.
புத்தகயாவில் புத்தர் பெற்ற ஞானம்தான் இந்து மறுமலர்ச்சி தீபத்தையும் ஏற்றியது. புனித இடங்களுக்குச் சென்று, நேரு, வாஜ்பாய்க்கு பிறகு பிரதமர் என்ற முறையில் நானும் மன நிறைவு அடைகிறேன்.
குறிப்பாக கிருஷ்ணரின் பிறந்த நாளில் இங்கு வந்துள்ளதை சிறப்பாகக் கருதுகிறேன். புத்தரும் கிருஷ்ணரும் உலகுக்கு படைத்த போதனைகள் ஏராளம். இருவரின் போதனைகளும் உலகில் தர்மத்தை நிலைநாட்டுவது ஆகும். இருவரும் கொள்கை கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
இரு தெய்வீக ஆத்மாக்களும் மக்களை ஒருங்கிணைக்கும் பலம் பெற்றவர்கள். அவர்களது போதனைகளும் அறிவுரைகளும் நடைமுறைக்கு ஏற்றவை, அழியாதவை இன்றும் என்றும் ஏற்கத்தக்கவை.
சமீபத்தில் டெல்லியில் ‘மோதல் மோதல் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான இந்து, பவுத்த மத மாநாடு’ நடைபெற்றது. இதில் பங்கேற்ற இரு மதத்தினரும் தங்கள் மதத்தைப் பரப்புவதற்கு சுதந்திரம் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால் ஒருவரின் சித்தாந்தத்தை மற்றவர்கள் மீது திணிக்கும்போதுதான் மோதல் ஏற்படுகிறது. மேலும் மத சகிப்புத்தன்மை இல்லாததும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வழிவகுக்கிறது. இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு அந்த கருத்தரங்கில் ஒருமித்த கருத்த எட்டப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு மோடி பேசினார்.