Last Updated : 03 Sep, 2020 02:09 PM

 

Published : 03 Sep 2020 02:09 PM
Last Updated : 03 Sep 2020 02:09 PM

42,480 விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் 2019-ம் ஆண்டில் தற்கொலை: என்சிஆர்பி ஆய்வில் தகவல்

கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டில் 42 ஆயிரத்து 480 விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் 32 ஆயிரத்து 563 பேர் கூலித் தொழிலாளர்கள், 10 ஆயிரத்து 281 பேர் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையில் கூலித் தொழிலாளர்கள் மட்டும் 23 சதவீதமாகும். கடந்த 2018-ம் ஆண்டில் 30 ஆயிரத்து 132 பேர் தற்கொலை செய்த நிலையில் 2019-ம் ஆண்டில் அதைவிட அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டில் 42 ஆயிரத்து 480 விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 10,281 பேர் விவசாயிகள், 32 ஆயிரத்து 563 பேர் கூலித் தொழிலாளர்கள் ஆவர்.

10,281 விவசாயிகளில் 5,957 பேர் விவசாயிகள், 4,324 பேர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலையில் (1,39,123) விவசாயிகள் தற்கொலை மட்டும் 7.4 சதவீதமாகும். கடந்த 2018-ம் ஆண்டில் 10,389 பேர் தற்கொலை செய்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டில் சற்று குறைந்துள்ளது.

வேளாண் தொழில் செய்து வந்தவர்கள், விவசாயிகள் என 5,957 பேர் தற்கொலை செய்ததில், 5,563 பேர் ஆண்கள், 394 பேர் பெண்கள். 4,324 வேளாண் கூலித் தொழிலாளர்கள் தற்கொலையில் 3,749 பேர் ஆண்கள், 575 பேர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39.2 சதவீதம் விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன. அடுத்ததாக, கர்நாடகாவில் 19.4 சதவீதம், ஆந்திராவில் 10 சதவீதம், மத்தியப் பிரதேசம் 5.3 சதவீதம், சத்தீஸ்கர் தெலங்கானாவில் 4.9 சதவீதம் தற்கொலைகள் நடந்துள்ளன.

மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரகாண்ட், மணிப்பூர், சண்டிகர், டாமன் டையூ, டெல்லி, லட்சத்தீவுகள், புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 2019-ம் ஆண்டு விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் யாரும் தற்கொலை செய்யவில்லை.

ஒட்டுமொத்தமாக கடந்த 2019-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 123 தற்கொலைகள் நடந்துள்ளன. இது கடந்த 2018, 2017 ஆம் ஆண்டைவிட அதிகமாகும். 2018-ல் 1,34,516 பேர், 2017-ல் 1,29,887 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

தற்கொலை செய்துகொண்ட பிரிவுகளில் ஆய்வு செய்தால், தினக்கூலித் தொழிலாளர்கள்தான் 23.4 சதவீதம் பேர். அதைத் தொடர்ந்து குடும்பத்தில் உள்ள பெண்கள் தற்கொலை செய்துகொண்டது 15.4 சதவீதமாகும்.

இது தவிர சுயதொழில் செய்வோர் 11.6 சதவீதம், வேலையில்லாதவர்கள் 10.1 சதவீதம், ஊதியம் பெறுவோர் 9.1 சதவீதம், மாணவர்கள் மற்றும் வேளாண் துறையில் இருப்போர் தலா 7.4 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டனர். ஓய்வு பெற்றவர்களில் 0.9 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டனர். 14.7 சதவீதம் பேர் இதர பிரிவுகளில் இடம் பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த தற்கொலையில் 12.6 சதவீதம் அதாவது 17,588 பேர் கல்வி பயின்றவர்கள். 3.7 சதவீதம் அதாவது 5,185 பேர் பட்டம் பெற்றவர்கள். இதில் 23.3 சதவீதம், (32,427 பேர்) தங்களின் உயிரைத் தாங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பள்ளிப்படிப்போடு நிறுத்தியவர்கள்.

தற்கொலை செய்த 27,323 பேர் (19.6 சதவீதம்) பள்ளி நடுநிலைப்பள்ளி வரை மட்டும் பயின்றவர்கள்.
தொடக்கக் கல்விவரை படித்தவர்கள் 22,649 பேர் (16.3 சதவீதம்) தற்கொலை செய்துள்ளனர். 12-ம் வகுப்புவரை படித்த 19,508 பேர் (14 சதவீதம்) தற்கொலை செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த தற்கொலையில் 92,757 பேர் (66.7 சதவீதம்) திருமணம் முடித்தவர்கள். 32,852 பேர் (23.6 சதவீதம்) திருமணம் ஆகாதவர்கள். கணவனை இழந்த பெண்கள், 1.8 சதவீதம் (2,472 பேர்), விவாகரத்து பெற்ற பெண்கள் 997 பேர். கணவரைப் பிரிந்து வாழ்வோர் 963 பேர் தற்கொலை செய்துள்ளனர்''.

இவ்வாறு என்சிஆர்பி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x