Published : 03 Sep 2020 08:43 AM
Last Updated : 03 Sep 2020 08:43 AM

அருணாச்சல் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் இந்தியப் படைகள் குவிப்பு: சீனாவின் அத்துமீறலை தடுக்க களமிறங்கிய திபெத் வம்சாவளி வீரர்கள்

சீனாவுடனான லடாக் எல்லையில் கடந்த சில மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது. லடாக்கின் லே மலைப் பகுதியில் இந்திய விமானப் படையின் போர் விமானம் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டது. படம்: ஏஎப்பி

புதுடெல்லி

லடாக்கை தொடர்ந்து அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட கிழக்கு எல்லைப் பகுதிகளில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் அத்துமீறல்களைதடுக்க திபெத் வம்சாவளியை சேர்ந்த இந்திய வீரர்கள் எல்லையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்குப் பகுதி கரையில் கடந்த29-ம் தேதி நள்ளிரவு சுமார் 500 சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை விரட்டியடித்த இந்திய வீரர்கள், அங்குள்ள 3 மலை முகடுகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

லடாக்கின் காரகோரமில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய, சீன எல்லை நீள்கிறது. இந்த எல்லைப் பகுதியை இந்தோ திபெத் எல்லை காவல் படை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். தற்போது சீனாவின் அத்துமீறல்களை தடுக்க திபெத்வம்சாவளியை சேர்ந்த இந்தியவீரர்கள் எல்லையில் களமிறக்கப் பட்டுள்ளனர்.

திபெத் வம்சாவளியினர்

கடந்த 1950-ல் திபெத்தை, சீனராணுவம் ஆக்கிரமித்தது. தலாய்லாமா உட்பட பெரும் எண்ணிக்கையிலான திபெத்தியர்கள் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தனர். அப்போதே திபெத் வம்சாவளியை சேர்ந்த இந்திய வீரர்கள் அடங்கிய எஸ்.எப்.எப். என்ற சிறப்புப் படை உருவாக்கப்பட்டது. இது ரகசிய படைப்பிரிவாகும்.

இந்திய உளவு அமைப்பான ரா-வுடன் இணைந்து எஸ்.எப்.எப்.செயல்படுகிறது. இந்த படையைசேர்ந்த பலர், திபெத்தில் உளவாளிகளாக உள்ளனர். அவர்கள்தான் சீனப் படைகளின் நடமாட்டம் குறித்து இந்திய ராணுவத்துக்கு முக்கிய தகவல்களை அளித்து வருகின்றனர்.

இதன்காரணமாகவே பான்காங் ஏரியின் தெற்குப் பகுதியில், சீனப் படை வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்வதை முன்கூட்டியே அறிந்து அந்தப் பகுதி முழுவதையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. எஸ்.எப்.எப். படையை சேர்ந்த திபெத் வழ்சாவளி இந்திய வீரர்கள் லடாக் எல்லையில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

லடாக்கை தொடர்ந்து அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அருணாச்சல பிரதேசம், சிக்கிம்எல்லைகளில் சீனா அத்துமீறுவது வழக்கம். இதை தடுக்க அருணாச்சல பிரதேசத்தின் அன்ஜா எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அன்ஜா மாவட்ட அரசு உயரதிகாரி ஆயுஷ் சுதன்கூறும்போது, "வழக்கத்தைவிட கூடுதல் படைகள் முகாமிட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

லடாக்கில் இந்தியாவின் கை ஓங்கி வருவதால் அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறக்கூடும் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே கிழக்கு எல்லைப் பகுதிகளில் இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் நெருங்கிய நட்புநாடான மியான்மரை ஒட்டியஇந்திய எல்லைப் பகுதிகளிலும்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய-மியான்மர் எல்லைப் பகுதிகளை அசாம் ரைபிள்ஸ் படைவீரர்கள் காவல் காத்து வருகின்றனர். அந்தப் படையின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் சுக்தீப் சங்வான் கடந்த 31 முதல் 1-ம் தேதி வரை மியான்மர் எல்லைப் பகுதிகளில் ஆய்வு செய்தார்.

சீனாவின் அத்துமீறல்களை முறியடிக்க அனைத்து முனைகளிலும் தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x