Published : 03 Sep 2020 07:11 AM
Last Updated : 03 Sep 2020 07:11 AM

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கீழ் கிராமப்புறங்களில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் கடந்த 2005 முதல் மத்திய அரசு செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயரிடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இந்தத் திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக மத்திய அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தி வருகிறது. இதனால் கிராமங்கள் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிறிய நகரங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைச் செயலர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார் அவர் மேலும் கூறுகையில், “இந்தத் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் நீட்டிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் பரிசீலித்து வந்தது. தற்போது கரோனா பிரச்சினை காரணமாக விரைவில் இதை அமலுக்குக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெறும் நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.202 ஊதியமாகக் கிடைக்கும். ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x