Published : 02 Sep 2020 09:33 PM
Last Updated : 02 Sep 2020 09:33 PM

கரோனா: தேர்வு நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு

தேர்வுகள் நடத்தும்போது கோவிட்-19 பரவாமல் தடுப்பதற்குப் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தேர்வுகள் நடைபெறும் நேரம் முழுவதிலும் மாணவர்கள் (அவர்களின் பெற்றோர்கள்) மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்களுக்கு வருகை தருவார்கள். எனவே, பின்வரும் வகையிலான முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி தேர்வுகளை நடத்துவதற்குத் திட்டமிடுவது அவசியமாகிறது.

1. அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கோவிட்-19 பரவுதலைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் சாதாரண பொது சுகாதார நடவடிக்கைகள் இதில் அடங்கும். தேர்வு மையங்களில் எல்லா நேரங்களிலும் எல்லோரும் (அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்) இவற்றைக் கடைபிடிக்க வேண்டும். அவை பின்வருமாறு:

i. முடிந்தவரையில் தனிநபர்களுக்கு இடையில் 6 அடி தூரம் இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும்.

ii. முகக் கவச உறைகள் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

iii. கைகள் அழுக்காகத் தோன்றாத போதிலும்கூட, அடிக்கடி சோப்பு போட்டு (குறைந்தபட்சம் 40-60 விநாடிகள்) கைகளைக் கழுவிட வேண்டும். சாத்தியமான இடங்களில் ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினிகளை (குறைந்தபட்சம் 20 விநாடிகள்) பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

iv. சுவாசித்தலில் ஆரோக்கியமான வழிமுறைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். இருமல் / தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை திசுத்தாள்/ கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும் அல்லது முழங்கை மடிப்பில் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்திய திசுத்தாளை முறையாக குப்பையில் சேர்க்க வேண்டும்.

v. அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தை சுயமாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஏதும் உடல்நலக் குறைவு இருப்பதாக உணர்ந்தால் கூடிய சீக்கிரத்தில் உரியவர்களிடம் அதைத் தெரியப்படுத்த வேண்டும்.

vi.வெளி இடங்களில் துப்புவது முழுக்க முழுக்க தடை செய்யப்படுகிறது.

vii. முடிந்த வரையில், எல்லோரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த ஆலோசனை கூற வேண்டும்.

2. அனைத்துப் பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிலையங்கள்/ தேர்வு நடத்தும் ஆணையங்கள்/ தேர்வு மையங்களில் பின்வரும் ஏற்பாடுகளை கட்டாயமாகச் செய்திட வேண்டும்:

அ) தேர்வுகளுக்குத் திட்டமிடுதல்

i. நோய்க் கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு வெளியில் உள்ள தேர்வு மையங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட மண்டலத்தைச் சேர்ந்த அலுவலர்கள்/ தேர்வாளர்களை அனுமதிக்கக் கூடாது. இந்தத் தேர்வாளர்களுக்கு வேறு வழிமுறைகள் மூலமாக தேர்வில் பங்கேற்க வாய்ப்பு தரலாம் அல்லது பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிலையங்கள் பின்னர் வேறொரு நாளில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கலாம்.

ii. குறிப்பிட்ட ஒரு நாளில் தேர்வு மையத்தில் அதிகம் பேர் கூடுவதைத் தவிர்ப்பதற்காக, தேர்வு தேதிகளை இடைவெளி இருக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிலையங்கள் / தேர்வு நடத்தும் ஆணையங்கள் / தேர்வு மையங்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

iii. தனிநபர் இடைவெளி பராமரிக்க வேண்டியிருப்பதால், தேர்வு நடத்துவதற்குப் போதிய இடவசதி இருப்பதை கல்வி நிலையங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

iv. அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப முகக் கவச உறைகள் மற்றும் கிருமிநாசினிகள், சோப்பு, சோடியம் ஹைப்போ குளோரைட் உள்ளிட்டவற்றுக்கு பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிலையங்கள் / தேர்வு நடத்தும் ஆணையங்கள் / தேர்வு மையங்கள் உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

v. தேர்வு நடத்தும் அலுவலர்களும், தேர்வு எழுதுபவர்களும் தேர்வு மையத்தில் நுழையும் போது தங்களுடைய ஆரோக்கியம் குறித்து சுய உறுதிமொழி சமர்ப்பிக்க வேண்டும். ஹால் டிக்கெட் தரும்போது இதற்கான சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும். அதேபோல தேர்வு மையத்தில் செய்யக் கூடியவை / செய்யக் கூடாத விஷயங்களின் பட்டியலையும் ஹால் டிக்கெட் அளிக்கும் போதே கொடுத்திட வேண்டும்.

vi. தேர்வு மையத்துக்கு எவற்றைக் கொண்டு வரலாம், தேர்வு தொடர்பான ஆவணங்கள் எவை (அனுமதி அட்டை, அடையாள அட்டை போன்றவை), முகக்கவச உறை, தண்ணீர் பாட்டில், கை கிருமிநாசினி கொண்டு வருதல் பற்றி மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்திட வேண்டும்.

vii. தேர்வு நடைபெறும் நேரத்தில் ஒழுங்கை பராமரிக்க (எல்லா நேரமும் சமூக இடைவெளி நடைமுறைகளை பின்பற்றுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுதலை உறுதி செய்வதற்கு) போதிய அலுவலர்களை கல்வி நிலையம் பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.

viii. பதிவு செய்தலுக்கான அறைகள், ஆவணங்கள் சரிபார்த்தலுக்கான அலுவலர்கள், வருகைப் பதிவை பதிவு செய்தல் ஆகியவற்றுக்குப் போதிய வசதிகளை செய்திட வேண்டும். சமூக இடைவெளி நடைமுறைக்கு உட்பட்டதாக இவற்றைச் செய்ய வேண்டும்.

ix. கோவிட் பாதிப்பு சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து தேர்வறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

x. கோவிட் 19 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கும் போஸ்டர்கள்/ அறிவிப்புப் பலகைகள் / ஒலி/காட்சி (ஆடியோ விசுவல்) அறிவிப்புகள் செய்ய தேர்வு மையத்தில் (உள்ளேயும் வெளியிலும்) ஏற்பாடு செய்ய வேண்டும்.

xi. மேலோட்டமாக பரிசோதனை செய்யும் போதோ அல்லது தேர்வு நடக்கும்போதோ யாருக்கேனும் கோவிட் அறிகுறி கண்டறியப்பட்டால், மருத்துவ ஆலோசனை பெறும் வரையிலான நேரம் வரையில் அவர்களைத் தனிமைப்படுத்த தனியாக அறை வசதி தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். அறிகுறி உள்ள தேர்வாளர்களை தேர்வுக்கு அனுமதிப்பது குறித்து தேர்வு நடத்தும் ஆணையங்கள் முன்கூட்டியே தெளிவான தகவல்களை வெளியிட வேண்டும்.

ஆ) தேர்வு மையத்திற்குச் சென்று திரும்புவதற்கான போக்குவரத்து வசதி

தேர்வுகளை நடத்தும் கல்வி நிலையங்கள் போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்தால், பேருந்துகள் / இதர வாகனங்கள் கிருமிநீக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இ) தேர்வு மையத்தில் நுழைதல் மற்றும் வெளியேறுதல்

i. நுழைவாயில்களில் கை சுத்தம் செய்தல் மற்றும் வெப்ப மானி (தெர்மல் ஸ்கேன்) வசதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். சுய உறுதிமொழி வரையறைக்கு உட்படாத தேர்வு அலுவலர்கள்/ தேர்வாளர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது.

ii. அறிகுறி இல்லாத அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

iii. இயல்பான நடைமுறையில், நோய் அறிகுறி கண்டறியப்படும் தேர்வாளர் அருகில் உள்ள சுகாதார மையத்துக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும். அவர் மாற்று முறையில் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கலாம். அல்லது தேர்வாளர் உடல் தகுதி பெற்ற பிறகு, வேறொரு நாளில் அவர்களுக்குத் தேர்வு நடத்த பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிலையங்கள் ஏற்பாடு செய்யலாம். இருந்தபோதிலும், நோய் அறிகுறி இருந்தும், தேர்வை எழுத வேண்டும் என்று தேர்வாளர் வலியுறுத்தினால், தனிமையான அறையில் அவரை தேர்வு எழுத அனுமதிக்கலாம். தேர்வு நடத்தும் ஆணையங்களால் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் இதற்கான அனுமதியை அளிக்கலாம்.

iv. முகக்கவச உறை இருந்தால் மட்டுமே அனைத்து அலுவலர்கள் மற்றும் மாணவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். தேர்வு மையத்தில் இருக்கும் எல்லா நேரத்திலும், அனைவரும் கட்டாயமாக முகக்கவச உறை அணிந்திருக்க வேண்டும்.

v. அதிகமான கூட்டம் சேராமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நுழைவு மற்றும் வெளியேறுவதற்கான வாயில்கள் அமைக்க வேண்டும்.

vi. நுழைவதற்கு வரிசையில் காத்திருக்கும் போதும், தேர்வு மையத்திற்குள் இருக்கும் போதும், முடிந்த வரையில் தனிநபர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி பராமரித்திட வேண்டும்.

vii. வரிசையை கையாள்வதற்கும், வளாகத்தில் சமூக இடைவெளி பராமரிப்பதை உறுதி செய்வதற்கும் போதிய அளவுக்கு இடைவெளி விட்டு குறியீடுகள் உருவாக்கிட வேண்டும்.

viii. தேர்வு மையத்திற்கு உள்ளும், வெளியில் வாகன நிறுத்தும் இடங்கள், காத்திருப்புப் பகுதிகள் போன்ற இடங்களிலும் அதிக கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தனிநபர் இடைவெளி நடைமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்திட வேண்டும்.

ix. மாணவர்களின் பைகள் / புத்தகங்கள் / செல்போன்களை தேர்வு மையத்தில் அனுமதிக்கக் கூடாது.

x. தேர்வாளர்கள் தனிநபர் இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றி, சிறு சிறு குழுக்களாக பதிவு செய்யும் அறைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் வருகைப் பதிவு செய்தலுக்கு இவ்வாறு அழைத்துச் செல்லப்படுவார்கள். பிறகு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைக்கு சிறு சிறு குழுக்களாக கண்காணிப்புடன் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

xi. தேர்வாளர்களை தொட்டு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், தெர்மல் ஸ்கேனிங் செய்த பிறகே அவ்வாறு செய்ய வேண்டும். அவ்வாறு பரிசோதனையில் ஈடுபடும் நபர் கையுறைகளுடன், மூன்றடுக்கு மருத்துவ முகக்கவச உறை அணிந்திருக்க வேண்டும். அந்த அலுவலர் ஒவ்வொரு முறை கையுறைகளை மாற்றும்போதும், முறையாக கைகளில் கிருமிநீக்கம் செய்து கொள்ள வேண்டும்.

xii. தேர்வு முடிந்தபிறகு, தேர்வாளர்கள் வரிசையில் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும்.

ஈ) நோய் தாக்க அதிக வாய்ப்புள்ள தனிநபர்கள் விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

i. நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ள அனைத்து அலுவலர்களும் (வயது முதிர்ந்த அலுவலர்கள், கர்ப்பிணி அலுவலர்கள், வேறு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அலுவலர்கள்) தேர்வறை கண்காணிப்பு / தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படக் கூடாது.

ii.மாணவர்களுடன் நேரடித் தொடர்பில் வராத பணிகளில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

உ) தேர்வு மையத்திற்குள் நடமாட்டம், தேர்வு நடத்துதல் உள்பட இருக்கை ஏற்பாடுகள் செய்தல்

i. மின் தூக்கிகளில் (லிப்ட்களில்) செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதில் தனிநபர் இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ii. தேவையின்பேரில் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும்போது, அவை அவ்வப்போது கிருமிநீக்கம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

iii. தேர்வு எழுதுவதற்கு உதவியாளர் சேவையை பயன்படுத்திக் கொள்ளும் மாற்றுத் திறனாளி (PwD) தேர்வாளர்களைப் பொருத்த வரையில், தேர்வாளரும், பதில்களை எழுதுபவரும் முகக்கவச உறைகள் அணிந்திருக்க வேண்டும். அவர்களும் போதிய இடைவெளிவிட்டு அமர்ந்திருக்க வேண்டும்.

iv. தொடுதல் இல்லாத OR குறியீடு, ஆன்லைன் படிவங்கள், டிஜிட்டல் கையெழுத்துகள் போன்ற நடைமுறைகளை கல்வி நிலையங்கள் பின்பற்றலாம்.

v. தேர்வு அரங்கில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு (பயன்படுத்திவிட்டு குப்பையில் போடும் கோப்பைகளாக இருப்பது நல்லது) போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

vi. தேர்வாளர்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பராமரிக்கும் வகையில் இருக்கை வசதிகள் செய்ய வேண்டும்.

vii. பேனா மற்றும் விடைத்தாள்கள் அடிப்படையிலான தேர்வுகளுக்கு வினாத்தாள்கள் / விடைத்தாள்களை வழங்குவதற்கு முன்னதாக தேர்வறை கண்காணிப்பாளர் தன் கைகளை கிருமிநீக்கம் செய்து கொள்ள வேண்டும். அவற்றைப் பெறுவதற்கு முன்னதாகவும், தேர்வுக்குப் பின் திருப்பிக் கொடுப்பதற்கு முன்னதாகவும் தேர்வாளர்களும் இதேபோல கைகளில் கிருமிநீக்கம் செய்து கொள்ள வேண்டும். விடைத்தாள்களை சேகரித்தல் மற்றும் கட்டு கட்டுதலின் ஒவ்வொரு நிலையிலும் கைகளை கிருமிநீக்கம் செய்திட வேண்டும். விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டதில் இருந்து 72 மணி நேரத்திற்குப் பிறகு அவற்றைப் பிரிப்பது நல்லதாக இருக்கும்.

viii. தாள்களை எண்ணுவதற்கோ/ விநியோகிப்பதற்கோ விரலில் எச்சிலைத் தொட்டு பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது.

ix. தனிநபர்களுடைய பொருட்கள்/ தேர்வு சாதனங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது.

x. ஆன்லைன்/ கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுகளுக்கு, தேர்வுக்கு முன்பும், தேர்வு முடிந்த பின்பும் கம்ப்யூட்டர்களை ஆல்கஹால் கொண்ட துணியால் துடைத்து கிருமிநீக்கம் செய்திட வேண்டும்.

xi. எதிர்காலத்தில் அடையாளம் காணுதல் மற்றும் தடமறிதல் வசதிக்காக தேர்வு அலுவலர்கள் / தேர்வாளர்கள் குறித்த அனைத்துத் தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

xii. குளிர் சாதன / காற்றோட்ட வசதிக்கு மத்திய பொதுப் பணித் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் (i) அனைத்து ஏர்-கண்டிஷனர்களும் 24-30 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் இயக்கப்பட வேண்டும், (ii) ஈரப்பதம் 40-70 சதவீத வரம்பில் இருக்க வேண்டும், (iii) முடிந்தவரையில் காற்று மறுசுழற்சி செய்யப்படக் கூடாது, (iv) முடிந்த வரையில் புதிதாக வரும் காற்றை சுவாசிக்க வேண்டும், (v) உள்ளே வரும் காற்று வெளியேற போதிய வசதி இருக்க வேண்டும் என்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஊ) கழிவுநீக்கம் மற்றும் தூய்மை

i.தேர்வுக்கு முன்பாகவும், தேர்வு முடிந்த பிறகும் தேர்வு அரங்கு மற்றும் இதர பொதுவான பகுதிகளில் கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

ii. தேர்வு மைய வளாகத்தில் செம்மையாக அடிக்கடி கழிவுநீக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கழிவறைகள், குடிநீர் வசதி மற்றும் கைகழுவும் இட வசதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

iii. அதிகம் தொடக் கூடிய (கதவு கைப்பிடிகள், லிப்ட் பொத்தான்கள், படிக்கட்டுகளின் ஓரத்தில் உள்ள கைப்பிடிகள், பெஞ்ச்கள், கழிவறையில் பொருத்தியுள்ள சாதனங்கள்) இடங்களை அவ்வப்போது சுத்தம் செய்து (1% சோடியம் ஹைட்ரோகுளோரைட் கொண்டு) கிருமிநீக்கம் செய்திட வேண்டும். அனைத்து தேர்வு அரங்கு மற்றும் இதர பொதுவான பகுதிகளிலும் இதைக் கட்டாயமாகச் செய்திட வேண்டும்.

iv. பயன்படுத்திய முகக்கவச உறைகளை, மையத்தில் வைத்துள்ள மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டிகளில் போடுமாறு மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகளை, ஆபத்தான தன்மை கொண்ட கழிவுகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அகற்றிட வேண்டும்.

g) தேர்வு நடைபெறும் நேரத்தில் தேர்வாளருக்கு அறிகுறி தோன்றினாலோ அல்லது சந்தேகத்துக்கு உரியவரையோ கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

i. மற்றவர்களிடம் இருந்து அவரை தனிமைப்படுத்தி ஓர் அறை அல்லது பகுதியில் வைத்திருக்க வேண்டும்.

ii. டாக்டர் வந்து பரிசோதிக்கும் வரையில் அந்தத் தேர்வாளர் முகக்கவச உறை அணிந்து தனிமை இடத்தில் இருக்க வேண்டும்.

iii. நோய் அறிகுறிகள் இருந்தும் தேர்வு எழுத விரும்பும் தேர்வாளர்களை தனியாக ஓர் அறைக்கு அழைத்துச் சென்று தேர்வு எழுத அனுமதிக்கலாம்.

iv. அறிகுறிகள் மோசம் அடைந்தால், மிக அருகில் உள்ள மருத்துவ மையத்திற்கு (மருத்துவமனை / கிளினிக்) தகவல் தெரிவிக்க வேண்டும் அல்லது, மாநில அல்லது மாவட்ட உதவி மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

v. பணி ஒதுக்கம் செய்யப்பட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரி (மாவட்ட ஆர்.ஆர்.டி./ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்) நிலைமையை ஆய்வு செய்வார். அதன்படி அவரைக் கையாள்வது மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கையாள்வது, கிருமிநீக்கம் பற்றிய நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும்.

vi. அந்த நபருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் அந்த வளாகத்தில் கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

தேர்வுகளுக்கு திட்டமிடுதல் மற்றும் நடத்துதலுக்கான குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலே உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிலையங்கள் / தேர்வு நடத்தும் ஆணையங்கள் / தேர்வு மையங்கள் தங்களின் தேவைக்கு ஏற்பவும், பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2995-ன் கீழ் அவ்வப்போது வெளியிடப்பட்ட உத்தரவுகளின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளைப் பின்பற்றியும் கூடுதல் நடவடிக்கைகளை அமல்படுத்திக் கொள்ளலாம்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x