Last Updated : 02 Sep, 2020 06:44 PM

 

Published : 02 Sep 2020 06:44 PM
Last Updated : 02 Sep 2020 06:44 PM

பப்ஜி உள்பட சீனாவின் 118 ஸ்மார்ட்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்கும் வகையில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பப்ஜி உள்பட சீனாவின் 118 ஸ்மார்ட்போன் செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் பப்ஜி விளையாாட்டுக்கு மட்டும் 3.30 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். சீனா தரப்பிலும் சேதம் ஏற்பட்டது.

சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்குப் பதிலடியாக கடந்த ஜூன் 29-ம் தேதி டிக் டாக், யூசிபிரவுசர், ஷேர் இட், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட சீனாவின் 59 ஸ்மார்ட்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பின் கடந்த ஜூலை மாதத்தில் 100க்கும் மேற்பட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று பப்ஜி உள்பட சீனாவின் 118 ஸ்மார்ட்போன் செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் நலனுக்காகவும், இந்தியாவின் பாதுகாப்புக்காகவும் சீனாவின் 118 ஸ்மார்ட்போன் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69ஏ பிரிவின் கீழ் மொபைல் விளையாட்டுக்கான செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் சைபர் தளத்தின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டின் நலனுக்காகவும், பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான இந்திய இண்டர்நெட் பயன்பாட்டாளர்களையும், மொபைல் பயன்படுத்துவோர்களையும் பாதுகாக்க முடியும்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள், அவர்கள் இருக்கும் இடம் ஆகியவை ஆண்ட்ராய்ட் தளங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத சர்வர்கள் மூலம் திருடப்படுவதாகப் பல புகார்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வந்தன.

இந்தத் தரவுகளைத் தொகுத்து, ஆய்வு செய்தபோது, இந்தியப் பாதுகாப்புக்கும், தேசியப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதை உணர்த்தியது. இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் மிகவும் ஆழமான மற்றும் உடனடி அக்கறை கொண்ட விஷயமாக இருந்ததால், இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எம்.பி.க்கள், பொதுமக்களால் சீனச் செயலிகள் குறித்த கவலைகள் தெரிவிக்கப்பட்டன.

இந்திய இறையாண்மையைப் பாதிக்கும், குடிமக்களின் அந்தரங்க உரிமையைப் பாதிக்கும் இந்தச் செயலிகளுக்கு எதிராகக் கடும் எதிர்ப்பு மக்கள் மத்தியில் எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது''.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x