Published : 02 Sep 2020 06:31 PM
Last Updated : 02 Sep 2020 06:31 PM

பென்ஷன்கூடக் கிடைக்காமல் கஷ்டத்தில் இருக்கும் தியாகி பப்பு: அலைபேசியில் ஆறுதல் சொன்ன நடிகர் மம்மூட்டி

கேரளத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் மிகவும் ஏழ்மையான சூழலில், தனிமையில் கஷ்டப்படுவது குறித்து நடிகர் மம்மூட்டிக்குத் தெரியவர, தியாகியைத் தொலைபேசியில் அழைத்து ஆறுதலாகப் பேசியவர், அவரது நிலை குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

திருச்சூர் மாவட்டம், கொடக்கரா பகுதியைச் சேர்ந்தவர் பப்பு. 94 வயதான இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்ததாலேயே, பப்பு திருமணம்கூடச் செய்து கொள்ளவில்லை. 94 வயதிலும் தனிமையில் நாட்களை நகர்த்தி வரும் பப்புவின் வீடு மிகவும் மோசமான நிலையில் இருப்பது குறித்தும், தியாகிகள் பென்ஷன் இதுவரை கிடைக்காமல் இருப்பது குறித்தும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையறிந்த நடிகர் மம்மூட்டி, தியாகி பப்புவை அலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்துத் தியாகி பப்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனது வீட்டருகே உள்ள பொதுப் பணித்துறை அலுவலகம் ஒன்றில் துப்புரவுப் பணியாளராக இருந்தேன். மாதம் 300 ரூபாய் சம்பளம் எனப் பேசி எடுத்தார்கள். ஆனால், 11 வருடங்களாக எனக்குச் சம்பளம் தரவில்லை. அதுகுறித்தும், தியாகிகள் பென்ஷன் கேட்டும் முதல்வர் தொடங்கி, ஆட்சியர் அலுவலகம் வரை பலமுறை அலைந்துவிட்டேன்.

சில வருடங்களுக்கு முன்பு திருச்சூர் ஆட்சியர், வீட்டுக்கு வந்து ஆய்வுசெய்துவிட்டு என் வீட்டைப் புனரமைத்துக் கொடுக்கும்படி அதிகாரிகளிடம் கூறினார். வீட்டின் சுற்றுப் பகுதிகளைச் சுத்தம்செய்து, புனரமைக்கத் தொடங்கியபோதே அந்த ஆட்சியர் மாற்றலாகிவிட்டார். அதன் பின்பு வேலைகளை அப்படியே போட்டுவிட்டார்கள். 94 வயதில் நானே சமைத்துச் சாப்பிட ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. இந்த வீடும் மழைக்கு ஒழுகும். வெயில் நேரங்களில் வீட்டுக்குள் சூடு தெரியும்.

இதையெல்லாம் கேள்விப்பட்டு நடிகர் மம்மூட்டி என்னை அழைத்துப் பேசியது ஆச்சரியமாக இருந்தது. திடீரென அழைத்தவர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் குறித்தும் ஆர்வமாகக் கேட்டார். அப்போதுதான், ‘தி கிங்’ என்னும் மலையாளப் படத்தில் நீங்கள் கலெக்டராக நடித்தீர்கள்தானே. நிஜமாகவே நீங்கள் கலெக்டராக இருந்திருந்தால் இப்போது என் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்’ என்று சொன்னேன். அதற்கு மம்மூட்டி, ‘அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறது. உங்களின் நிலைமை குறித்து அரசுக்குத் தெரியப்படுத்துகிறேன். விரைவில் நல்லது நடக்கும்’என நம்பிக்கையூட்டினார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x