Last Updated : 02 Sep, 2020 06:10 PM

 

Published : 02 Sep 2020 06:10 PM
Last Updated : 02 Sep 2020 06:10 PM

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தர மறுத்தல் கூட்டாட்சி முறையை அழிக்கும் முயற்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரிவருவாய் இழப்பீட்டைத் தர மறுப்பது கூட்டாட்சி முறையை அழிக்க முயலும் முயற்சி என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த வாரம் 41-வது ஜிஎஸ்டி கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. அப்போது, அவர் பேசுகையில், “நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதில் ரூ.65 ஆயிரம் கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும். மாநில அரசுகள் முன் இரு வாய்ப்புகளை வைக்கிறோம்.

மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க ரூ.97 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்குப் பின் இதை மாநில அரசுகள் திருப்பிச் செலுத்த முடியும். ரூ.2.35 லட்சம் கோடி வேறுபாட்டை ரிசர்வ் வங்கியிடம் கலந்தாய்வு செய்து பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், கரோனாவைக் காரணம் காட்டி தற்போது இழப்பீடு தர முடியாது, ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறுங்கள் என மாநில அரசுகளிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு 7 மாநில அரசுகளும், ஒரு யூனியன் பிரதேசமும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளன.

பஞ்சாப், தெலங்கானா, சத்தீஸ்கர், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலங்களுக்குரிய இழப்பீட்டை மத்திய அரசுதான் வழங்க வேண்டும், கடன் பெற முடியாது. மத்திய அரசு வேண்டுமானால் கடன் பெற்று மாநிலங்களுக்கு வழங்கலாம் எனத் தெரிவித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடிக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடு தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு தர மறுப்பதன் மூலம் மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை தோல்வி அடைந்துவிடக்கூடாது என்று உங்களை வலியுறுத்துகிறேன்.

ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்குத் தர மறுப்பதன் மூலம் நாட்டின் கூட்டாட்சி அரசியலுக்குத் தாங்க முடியாத பேரிடி விழவும் அனுமதிக்கக் கூடாது.

ஜிஎஸ்டி வரியால் நான் மிகுந்த குழப்பமடைந்துள்ளேன். இழப்பீட்டைத் தர மறுப்பது, மாநில அரசுகள் மீதான மத்திய அரசின் தார்மீகப் பொறுப்பு மற்றும் நம்பிக்கைக்குத் துரோகம் விளைவிப்பதாகும். கூட்டாட்சி முறையில் ஒவ்வொரு அம்சத்தையும் மீறுவதாகும்.

மாநில அரசுகள் தங்களின் வரிவிதிக்கும் அதிகாரத்தில் வாட் வரி உள்ளிட்ட 70 சதவீத அதிகாரத்தை மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியிடம் ஒப்படைத்துவிட்ட நிலையில், இப்போது இழப்பீட்டையும் தர மறுப்பது என்பது, மோசமான, அடிப்படை உரிமைகளை ரத்து செய்வதாகும். ஜிஎஸ்டி வரிவிதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு முழு இழப்பீட்டைத் தருவதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரிவருவாய் இழப்பீட்டைத் தர மறுப்பது கூட்டாட்சி முறையை அழிக்க முயலும் முயற்சியாகும்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x