

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா கட்சியின் தலைவா் ஜிதன் ராம் மாஞ்சி இன்று பாஜக கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதாதளம் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அப்போதைய முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகினார். தனது தீவிர விசுவாசியும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஜிதன் ராம் மாஞ்சியை முதல்வராக்கினார்.
ஆனால் ஆட்சியில் குழப்பம் ஏற்படவே 2015-ல் நிதிஷ் குமாா் மீண்டும் முதல்வா் பொறுப்பை ஏற்றார். முதல்வர் பதவி பறிக்கப்பட்ட மாஞ்சி ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா கட்சியைத் தொடங்கினார்.
2015 பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து நிதிஷ்குமாரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் அந்த கூட்டணி ஆட்சியை கைபற்றவில்லை.
2017- ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ் குமாா் மீண்டும் இணைந்ததால் அக்கூட்டணியிலிருந்து மாஞ்சி விலகினாா். இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் இருப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் அதிருப்தியில் இருந்த ஜிதன் ராம் மாஞ்சி கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா கட்சியின் தலைவா் ஜிதன் ராம் மாஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமாரை அண்மையில் சந்தித்துப் பேசினாா்.
முதல்வா் நிதிஷ் குமாரின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசிவிட்டு வெளியே வந்த மாஞ்சி, செய்தியாளா்களிடம் கூறுகையில் முதல்வருடனான சந்திப்பில் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை, உள்ளூா் பிரச்னைகள் தொடா்பாகவே பேசினேன் எனக் கூறினார்.
ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்குத் தொகுதிப் பங்கீடு தொடா்பாக இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகின. பாஜக கூட்டணியில் அந்த கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் மாஞ்சி இன்று முறைப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளார்.