

தங்களது 7 வயது மகன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான அதிர்ச்சி தாங்க முடியாத பெற்றொர் புதுடெல்லியில் 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் லஷ்மண் சந்திர ரவ்த் (35), பபிதா ரவுத் (30). இவர்களுக்கு அவினாஷ் ராவ்த் என்ற 7 வயது மகன் இருந்தார். அவினாஷுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவினாஷ் பெற்றோர்கள் 5 மருத்துவமனையை அணுகியுள்ளனர், ஆனால் அந்த 5 மருத்துவமனைகளிலும் சிறுவனை அனுமதிக்க மறுத்துள்ளதாக தற்போது இந்த மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் நட்டாவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி பெற்றோர், பாதிக்கப்பட்ட சிறுவனை சுமந்து கொண்டு 5 மருத்துவமனைகளின் கதவுகளை தட்டியுள்ளனர். கடைசியில் பத்ரா மருத்துவமனையில் இரவு 11 மணிக்கு சிறுவன் அவினாஷ் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாளே அவினாஷ் உயிர் பிரிந்தது.
இதில் மனமுடைந்த பெற்றோர் 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் தற்கொலைக்கு தாங்களே பொறுப்பு என்றும், மகன் பலியான அதிர்ச்சி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்கள் எழுதி வைத்துள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.
சிறுவனை அனுமதிக்க மறுத்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட 5 மருத்துவமனைகள்:
சாகேயில் உள்ள மாக்ஸ் மருத்துவமனை
லஜ்பத் நகரில் உள்ள மூல்சந்த் கைரதிராம் மருத்துவமனை
மால்வியா நகரில் உள்ள ஆகாஷ் மருத்துவமனை
சாகே சிட்டி ஹாஸ்பிடல்
ஐரீன் மருத்துவமனை