‘சைக்கிள் டிவி’ எனும் பெயரில் யுடியூப் சேனல் தொடங்கியது சமாஜ்வாதி கட்சி

‘சைக்கிள் டிவி’ எனும் பெயரில் யுடியூப் சேனல் தொடங்கியது சமாஜ்வாதி கட்சி
Updated on
1 min read

உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி, ‘சைக்கிள் டிவி’ எனும் பெயரில் யுடியூப் சேனலை தொடங்கி உள்ளது. கரோனா பரவல் சூழலில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் 2022-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தற்போதைய கரோனா பரவல் சூழலுக்குஏற்ற வகையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ்சிங் யாதவ், ‘சைக்கிள் டிவி’ எனும் பெயரில் ஒரு யுடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இவர்களது கட்சியின் தேர்தல் சின்னமாக சைக்கிள் இருப்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த சேனலில் அன்றாடம் அரசியல் பிரச்சாரம் செய்யும் வகையில் இருபதுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் வெளியாகி வருகின்றன. இவை அத்தனையிலும் உ.பி.யின் ஆளும்கட்சியான பாஜகவையும் அதன்முதல்வரான யோகி ஆதித்யநாத்தையும் குறிவைத்து விமர்சிக்கப்படுகின்றன. இதில், சமாஜ்வாதி கட்சி தலைவர்களின் மேடை பேச்சுகளும் வெளியாகி வருகின்றன. அவ்வப்போது சமாஜ்வாதி சார்பில் நடத்தப்படும் செய்தியாளர் கூட்டங்களின் நேரடிக் காட்சிகளும் அதில்இடம் பெறுகின்றன. இவற்றை மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களின் முக்கிய இடங்களில்பொதுமக்கள் காணும் வகையில்பெரிய அளவிலான தொலைக்காட்சிகள் சமாஜ்வாதியின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் உ.பி.யின் பிராந்தியக் கட்சிகளில் யுடியூப் சேனலை தொடங்கிய முதல் அரசியல் கட்சி என்ற பெருமை சமாஜ்வாதிக்கு கிடைத்துள்ளது. இங்குள்ள மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இதுபோன்ற யுடியூப் சேனல் இல்லை.தேசிய கட்சிகளான பாஜக மற்றும்காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே யுடியூப் சேனல் தொடங்கப்பட்டு அதில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றிலும் அந்தக் கட்சிகளின் கூட்டங்களும் அதன் தலைவர்களின் உரைகளும் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. இவ்விரண்டிற்கும் பல லட்சங்களின் எண்ணிக்கையில் சந்தாதாரர்களும் உள்ளனர்.

ஓரிரு மாதங்களில் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக அங்கு இணையதளப் பிரச்சாரங்கள் தொடங்கி விட்டன. இதை முதலில் தொடங்கிய பாஜக பெரிய அளவிலான தொலைக்காட்சி திரைகளை கிராமங்களிலும் பரவலாகப் பொருத்தியுள்ளது. இந்த வகையில், உ.பி.யிலும் சமாஜ்வாதி தொலைக்காட்சி திரைகளை அமைத்து தனது பிரச்சாரத்தை ‘மிஷன் 2022’ எனும் பெயரில் தொடங்கி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in