Published : 02 Sep 2020 07:05 AM
Last Updated : 02 Sep 2020 07:05 AM

சீனா அத்துமீறி சொந்தம் கொண்டாடி வரும் லடாக் பான்காங் ஏரி பகுதியில் 3 மலை முகடுகள் இந்திய ராணுவ வசமானது

லடாக்கின் பான்காங் ஏரி பகுதியில் 3 மலை முகடுகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் அத்துமீற முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ராணுவ, ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கினர்.

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் 500 சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தனர். இதன்காரணமாக லடாக் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் எழுந்தது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் 3 மலை முகடுகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அந்தப் பகுதியில் சீன ராணுவம் புதிதாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இதைத் தொடர்ந்து பான்காங் ஏரியின் தெற்கு கரையில் பிளாக் டாப், ஹெல்மெட் பகுதியில் அமைந்துள்ள 3 மலைமுகடுகளையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. அங்கு சீன ராணுவம் பொருத்தியிருந்த கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, "பிளாக் டாப் பகுதியின் மலை முகடுகளை ஆக்கிரமிக்க சீன ராணுவம் முயற்சி செய்தது. இந்த முயற்சியை முறியடித்துவிட்டோம். 3 முக்கிய மலைமுகடுகள் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. சீன வீரர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தன.

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நராவனே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் லடாக்கில் சீன வீரர்களின் அத்துமீறலை தடுப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. எதையும் எதிர்கொள்ள முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் பீரங்கிகளை குவித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் பீரங்கிகளை எல்லைக் கோட்டுக்கு அருகே நிறுத்தி வைத்துள்ளது. தரை, வான் வழி ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மத்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இருதரப்பு ஒப்பந்தங்களை மீறி பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. பான்காங் ஏரியின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்ற சீனா முயற்சி செய்கிறது. இந்திய மண்ணை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ராணுவம் எடுத்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x