

179 வகை ரசாயனங்கள் மற்றும் அதன் கூட்டுப்பொருள்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் சிறப்பு காப்பீடு எடுக்கா விட்டால் அவை இயங்க அனுமதிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக 1991-ம் ஆண்டின் பொது பொறுப்பேற்பு காப்பீடு (பிஎல்ஐ) சட்டம் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரசாயன விபத்து ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படும், ஊழியர்கள் அல்லாத பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில், இத்தொழிற்சாலைகள் காப்பீடு எடுப்பதை இந்த சட்டம் கட்டாயம் ஆக்கியுள்ளது.
ஒரு பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்த ரசாயனங்களை பயன்படுத்தும்போது, காப்பீடு பிரிமியம் செலுத்துவதற்கு சுற்றுசூழல் மீட்பு நிதி என்ற பெயரில் பொது நிதியம் ஏற்படுத்தவும் இந்த சட்டம் வகை செய்கிறது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவை தொடர்ந்து அனைத்து மாநிலங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஓர் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
பிஎல்ஐ சட்டத்துக்கு உட்பட்டு நடக்காத தொழிற்சாலைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதை உறுதி செய்யும்படி அந்த உத்தரவில் கேட்டுக்கொள்ளப்படும். அறியாமை காரணமாகவும் பல உரிமை யாளர்கள் இந்த காப்பீடு எடுக்கத் தவறுவதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.