ஜிஎஸ்டி வரி வருவாய் பற்றாக்குறை: இழப்பீடு தொகைக்காக கடன் வாங்கக் கோரும் மத்திய அரசின் ஆலோசனைக்கு 8 மாநிலங்கள் எதிர்ப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்
Updated on
2 min read

ஜிஎஸ்டி வரி வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்க மாநிலங்கள் ரிசர்வ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் ஆலோசனைக்கு 7 மாநிலங்களும், ஒரு யூனியன் பிரதேசமும் கடுமையாக எதிர்த்துள்ளன.

கடந்த வாரம் ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 41-வது ஜிஎஸ்டி கூட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.

அப்போது, நிர்மலா சீதாராமன் பேசுகையில், “நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதில் ரூ.65 ஆயிரம் கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும். மாநில அரசுகள் முன் இரு வாய்ப்புகளை வைக்கிறோம்.

மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க ரூ.97 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்குப் பின் இதை மாநில அரசுகள் திருப்பிச் செலுத்த முடியும். ரூ.2.35 லட்சம் கோடி வேறுபாட்டை ரிசர்வ் வங்கியிடம் கலந்தாய்வு செய்து பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், கரோனாவைக் காரணம் காட்டி தற்போது இழப்பீடு தர முடியாது, ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறுங்கள் என மாநில அரசுகளிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு 7 மாநிலங்களும், ஒரு யூனியன் பிரதேசமும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளன.

பாஜக ஆளாத மாநிலங்களான கேரளா, பஞ்சாப், தெலங்கானா, டெல்லி, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகியவையும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் கடன் வாங்கும் ஆலோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஜிஎஸ்டி வரிவருவாய் இழப்பீடு குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்
கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்

ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைச் சரிசெய்ய மாற்று வழிமுறையை மத்திய அரசு யோசிக்க வேண்டும் என மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில், “7 மாநிலங்கள் மத்திய நிதியமைச்சர் அறிவித்த ஜிஎஸ்டி இழப்பீடு ஆலோசனையை நிராகரித்துவிட்டன. எங்கள் ஒருமித்த எண்ணம் என்னவென்றால், மத்திய அரசு கடன் பெற்று எங்களுக்குக் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் வாய்ப்பை நிராகரிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வாய்ப்பில்லை. மாநில அரசின் உரிமைைய விட்டுத்தரமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நிதியமைச்சர் மன்ப்ரீதி சிங் பாதல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், “ உங்களின் ஆலோசனை தெளிவில்லாமல் இருப்பதால், மீண்டும் ஜிஎஸ்டி ஆய்வுக்கூட்டத்தைக் கூட்டுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், “மாநில அரசுகளைக் கடன் பெறக் கோரி மத்திய அரசு நிர்பந்திக்கக் கூடாது. வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்புகளை மத்திய அரசுதான் ஈடுகட்ட வேண்டும். மாநில அரசுகளுக்குப் பொறுப்பு இல்லை. அரசியலமைப்புச் சட்டப்படி ஜிஎஸ்டி வரியில் ஏற்படும் இழப்புகளைத் தருவது மத்திய அரசின் கடமையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா நிதியமைச்சர் டி ஹரிஸ் ராவ் கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு இழப்பீட்டைத் தருவதில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறது. ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பும், கரோனா வைரஸும் கடவுளின் செயல் என்று சொல்கிறது மத்திய அரசு.

இழப்பீடு தொகைக்கு மாநிலங்கள் கடன் பெறச் சொல்வது நியாயமானது அல்ல. ஜிஎஸ்டி சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், மாநில வரிவருவாய் 14 சதவீதத்துக்கும் குறைந்தால், இழப்பீடு தருவது மத்திய அரசின் பொறுப்பு எனக் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவி்த்தார்.

மாநிலங்களுக்கு இழப்பீட்டை ஈடுகட்ட கடன் பெற முடியாது, மாற்று ஆலோசனையை முன்வைக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in