

ஹரியாணா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வித் தகுதி சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித் துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், பொது வேட்பாள ராக இருந்தால் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் தலித் வேட்பாளர்களாக இருந்தால் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சட்டப்பேரவை யில் கடந்த 7-ம் தேதி சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வேட்பாளர்கள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றிருக்க கூடாது என்றும் அந்தச் சட்டத்தில் கூறப்பட் டிருந்தது.
இந்த சட்டத்தை எதிர்த்து, ‘அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம்’ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த மனுவில், “ஹரி யாணா மாநில அரசு கொண்டு வந் துள்ள சட்டம், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. மேலும், இதன்படி பெரும்பாலானவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது வேட்பாளர்களின் உரிமையை மீறிய தாகும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹரியாணா மாநில அரசு கொண்டுவந்த கட்டாய கல்வித் தகுதி சட்டத்துக்கு நேற்று தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து பதில் அளிக்கும்படி மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
ஹரியாணா மாநிலத்தில் அக்டோபர் மாதம் 4, 11 மற்றும் 18-ம் தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டாய கல்வித் தகுதி சட்டத்தை எதிர்த்த வழக்கில், பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தால், தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக் கப்படும் என்று தெரிகிறது.