

தனக்கு 3 படுக்கையறை கொண்ட வீடு வேண்டும் என்று இந்திராணி யிடம் ஷீனா மிரட்டியதாகவும் இதுவும் கொலைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக் கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி இந்திராணி, தனது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா மற்றும் கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் ஆகியோருடன் சேர்ந்து வாடகைக் காரில் வைத்து தனது மகள் ஷீனாவை கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் அடுத்த நாள் ராய்கட் வனப்பகுதியில் உடலை போட்டுவிட்டு வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் கர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷீனாவின் கழுத்தை நெரிக்கும் போது, “இப்போது நீ கேட்ட 3 படுக்கை அறை வீட்டை எடுத்துக் கொள்” என்று பல முறை இந்திராணி கூறியதாக நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஷ்யாம் ராய் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்திராணி தனது 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் ஷீனாவை தனது தங்கை என்று அறிமுகப்படுத்தி உள்ளார். இதனால் உண்மையைக் கூறிவிடுவேன் எனக்கூறி இந்திராணியை ஷீனா அடிக்கடி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், பாந்த்ரா பகுதியில் தனக்கு 3 படுக்கை அறை கொண்ட வீடு வேண்டும் என்று கேட்டு இந்திராணியிடம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதை மனதில் வைத்தே ஷீனாவைக் கொலை செய்யும்போது இந்திராணி அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும், கொலைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுபோல பீட்டரின் முதல் மனைவிக்கு பிறந்த ராகுலை காதலித்து வந்துள்ளார் ஷீனா. இந்திராணி இதைக் கண்டித்தபோதும் பிடிவாதமாக இருந்துள்ளார். பீட்டரிடம் உண் மையை சொல்லப் போவதாகவும் மிரட்டி உள்ளார். ஷீனா-ராகுல் காதலுக்கு பீட்டர் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதுவும் இந்திராணிக்கு கோபத்தை உருவாக்கி உள்ளது.
மேலும், ராகுல்-ஷீனா திருமணம் நடந்தால், பீட்டரின் சொத்தில் தன்னால் உரிமை கொண்டாட முடியாது என அஞ்சி உள்ளார் இந்திராணி. இதுவும் கொலைக்கான மற்றொரு காரணமாக இருக்கும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.