Published : 31 Aug 2020 09:53 PM
Last Updated : 31 Aug 2020 09:53 PM

‘‘வகித்த பதவிகளுக்கு மதிப்பு ஏற்படுத்தித் தந்தவர் பிரணாப் முகர்ஜி’’- வெங்கய்ய நாயுடு புகழாரம்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘முகர்ஜி ஒரு தலைசிறந்த ராஜதந்திரி என்பதோடு, இந்தியாவின் தவப் புதல்வர்களில் ஒருவர் என்றும், தாம் வகித்த அனைத்துப் பதவிகளுக்கும் மதிப்பும், மரியாதையையும் ஏற்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டதாகவும்’’ நாயுடு கூறியுள்ளார்.

“முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு பற்றிய செய்தி அறிந்து, மிகுந்த துயரம் அடைந்தேன். அவர் ஒரு ராஜதந்திரி என்பதோடு, இந்தியாவின் தவப்புதல்வர்களில் ஒருவர். எளிமையான முறையில் வாழ்க்கையைத் தொடங்கி, தமது கடின உழைபபு, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக, நாட்டின் மிக உயர்ந்த அரசியல் சாசனப் பதவியை வகித்தவர் ஆவார்.

தமது, நீண்ட நெடிய பொது வாழ்வில், தாம் வகித்த அனைத்துப் பதவிகளுக்கும், மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தித் தந்தவர் பிரணாப் முகர்ஜி . நிர்வாக அனுபவம், இந்தியாவின் நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றிய ஆழ்ந்த புரிதல் காரணமாக சிறப்புற்றுத் திகழ்ந்த அவர், நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்ச்ர, திட்டக்குழுத் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற முறையில், குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் புதுமையான நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்பதை ஊக்குவித்தவர் அவர்.

நாடாளுமன்ற நடைமுறைகள், தற்கால அரசியல் மற்றும் பிற விவகாரங்களில் அவர் ஒரு கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தார். தலைசிறந்த நாடாளுமன்றவாதியாகத் திகழ்ந்த அவரது பேச்சாற்றல் அனைவரும் அறிந்தது ஆகும். அவர் பெற்றிருந்த அபார ஞாபகசக்தியும், எதையும் விரைவில் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஜனநாயகத்தை மேலும் ஆழமாகவும், வலுவாகவும் நிலைபெறச் செய்ய செய்ய வேண்டும் என்பதில் தனியாத ஆர்வம் காட்டிவந்தார். மிகச்சிறந்த ஒருமித்த கருத்துடைய ஒரு சில தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர்.

அவரது மறைவின் மூலம், இந்தியா, தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய வல்லமையைக் கொடுக்குமாறு ,இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x