ம.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலம், கொங்கன் & கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிராவில் பரவலாக கனமான முதல் மிக கன மழை வரை பெய்கிறது.

பல இடங்களில் சாலைகள், பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு மத்திய பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் மிக அதிக மழை பெய்யும்; கிழக்கு ராஜஸ்தான், குஜராத் மற்றும் துணை இமயமலை மேற்கு வங்கம், சிக்கிம்; மத்திய மகாராஷ்டிரா, அசாம் மற்றும் கொங்கன் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழையும்; கிழக்கு மத்தியப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கடலோர கர்நாடகாவின் ஒரு சில இடங்களில் இன்று அதிக மழைப் பொழிவும் இருந்தது.

20 இடங்களில் (பிஹாரில் 7, உத்தரப்பிரதேசத்தில் 4, ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 2, அசாம், குஜராத், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 1) கடுமையான வெள்ளப் பெருக்கால் (ஆபத்து நிலைக்கு மேல்) மற்றும் 24 இடங்களில் (14 பீகாரில், உத்தரபிரதேசத்தில் 6, அசாம் மற்றும் ஒடிசாவில் தலா 2) சாதாரண வெள்ளப் பெருக்கும் (எச்சரிக்கை நிலைக்கு மேலே) ஏற்பட்டுள்ளது. 30 நீர்த்தடுப்பணை மற்றும் அணைகளுக்கு (மத்தியப்பிரதேசத்தில் 8, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 3, ஆந்திரா, ஜார்கண்ட், மேற்குவங்கம், தமிழ்நாட்டில் தலா 2, ஒடிசா மற்றும் குஜராத்தில் தலா 1) நீர்வரத்து கணிப்பு வழங்கப்பட்டிருந்தாலும், நீர் வரத்து எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in