

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்த ஒரு ரூபாய் அபராதத் தொகையை நான் செலுத்திவிடுவேன், அதேநேரத்தில் தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவும்தாக்கல் செய்வேன் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவையும், நீதித்துறை குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார். இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, பிரசாந்த் பூஷண் குற்றவாளி எனக் கடந்த 14-ம் தேதி அறிவித்தது. அவரை மன்னிப்புக்கோரக்கூறி 3 நாட்கள் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் அளித்திருந்தது. ஆனால், மன்னிப்புக் கேட்க முடியாது என்று பிராசந்த் பூஷன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “ மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதமும், வரும் 15-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், 3 மாதம் சிறையும், 3 ஆண்டுகள் பயிற்சி செய்யத் தடையும் விதிக்கப்படும்” எனத் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீதித்துறை மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். இந்தவழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நான் ஒரு ரூபாய் அபராதத்தைச் செலுத்தி விடுகிறேன்.ஆனால், இந்த தீர்ப்பைத் எதிர்த்து மறுஆய்வு மனுத் தாக்கல் செய்வேன். எனக்கு என்ன தண்டனையை நீதிமன்றம் அளித்துள்ளதோ அதை ஏற்கிறேன். நான் சிறைக்குச் செல்வதற்கு அஞ்சவில்லை.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப்பின், என்னுடைய நண்பர், தோழர் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவண் எனக்கு ஒரு ரூபாய் அளித்தார், அதை நான் நன்றியுடன் பெற்றுக்கொண்டேன்.
உச்ச நீதிமன்றத்தையோ, நீதித்துறையையோ மரியாதைக்குறைவாக எண்ணும் நோக்கில் என்னுடைய ட்விட்டரில் பதிவிடவில்லை. ஆனால், நீதிமன்றம் அதன் பணியிலிருந்து விலகுவதாக நான் உணர்ந்தால் அது குறித்து என்னுடைய கருத்தைத் தெரிவித்தேன்.
இது பேச்சு சுதந்திரத்துக்கான திருப்புமுனையான தருணமாக கருதுகிறேன், இதன் மூலம் ஏராளமான மக்கள், அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பார்கள் “ எனத் தெரிவித்தார்.