

நீதித்துறையையும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் விமர்சித்தமைக்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார். நீதித்துறை குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, பிரசாந்த் பூஷண் குற்றவாளி எனக் கடந்த 14-ம் தேதி அறிவித்தது.
பிராசந்த் பூஷண் மன்னிப்பு கேட்க 3 நாட்கள் அவகாசத்தை நீதிபதிகள் அளித்திருந்தனர். ஆனால், 24-ம் தேதி விசாரணைக்கு மீண்டும் இந்த வழக்கு வந்தபோது, மன்னிப்புக் கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான் நேர்மையற்ற முறையில் கேட்கும் மன்னிப்பு என் மனசாட்சியையும், புனிதமாகக் கருதும் நீதித்துறையையும் அவமதித்தது போலாகும்.
நம்பிக்கைகளை வெளிப்படுத்தக்கூடிய எனது நிபந்தனையுடன் அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு நேர்மையற்றதாகிவிடும். சிறப்பான நிலையிலிருந்து விலகிச் செல்லும்போது அதுகுறித்து நான் பேசுவது எனது கடமை என நம்புகிறேன்.
என் மீதான நன்னம்பிக்கையில்தான் கருத்துத் தெரிவித்தேனே தவிர, உச்ச நீதிமன்றத்தையோ அல்லது தலைமை நீதிபதியையோ அவமானப்படுத்தும் வகையில் பேசவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரங்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு இன்று அறிவித்தது.
அவர்கள் அளித்த தீர்ப்பில், “அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் மறுக்கப்படாது. ஆனால், அதே நேரத்தில் மற்றவர்களின் உரிமையும் மதிக்கப்பட வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.
வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் இந்த அபராதத்தை அவர் நீதிமன்றப் பதிவாளரிடம் செலுத்த வேண்டும். இதைச் செலுத்த தவறினால், அவருக்கு 3 மாதம் சிறைத் தண்டனையும், 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி செய்யவும் தடை விதிக்கப்படும்” எனத் தீர்ப்பளித்தனர்.